India T20 Squad: மீண்டும் ஷமி.. பும்ராவுக்கு ஓய்வு.. இங்கிலாந்துக்கு எதிரான இந்திய டி20 அணி அறிவிப்பு!
ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலும், அக்சர் படேல் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள். பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை சனிக்கிழமை அறிவித்தது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.
பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரின் பெர்த் மற்றும் சிட்னி டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய ஜஸ்பிரித் பும்ராவுக்கு, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலும், சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் துணை கேப்டனாகவும் செயல்படுவார்கள்.
இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் துருவ் ஜூரல் ஆகியோர் 20 ஓவர் அணியில் தங்கள் இடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான T20 தொடரில் இடம் பெற்றிருந்தாலும், ஆடும் லெவனில் இடம் பெறாத வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா, வரவிருக்கும் தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஷமி இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருப்பது முக்கிய அம்சமாகும். 34 வயதான வேகப்பந்து வீச்சாளர் 2023க்குப் பிறகு நீல நிற ஜெர்சியை அணிவார். கடந்த ஆண்டு, கணுக்கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஒரு வருடம் ஓய்வில் இருந்த ஷமி, வங்காள அணிக்காக உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்பினார். விஜய் ஹசாரே டிராபிக்கான வங்காள அணியிலும் ஷமி இடம் பெற்றிருந்தார்.
மீண்டும் திரும்பிய ஷமி
2023 ODI உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசியாக விளையாடிய ஷமி, போட்டி கிரிக்கெட்டுக்கு சிறப்பாக திரும்பினார். கணுக்கால் அறுவை சிகிச்சை மற்றும் தொடர்ச்சியான பின்னடைவுகளைத் தொடர்ந்து, நவம்பரில் மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டியில் வங்காள அணிக்காக மீண்டும் களமிறங்கினார்.
அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா மற்றும் முகமது ஷமி ஆகியோர் இந்திய வேகப்பந்து வீச்சை வழிநடத்துவார்கள். அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சுழற்பந்து வீச்சை கவனிப்பார்கள்.
போட்டிகள் நடைபெறும் இடங்கள்
ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் ஜனவரி 22 அன்று கொல்கத்தாவில் தொடங்கும். இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் ஜனவரி 25 மற்றும் 28 ஆகிய தேதிகளில் முறையே சென்னை மற்றும் ராஜ்கோட்டில் நடைபெறும். தொடரின் நான்காவது போட்டி ஜனவரி 31 அன்று புனேவில் நடைபெறும். பிப்ரவரி 2 அன்று மும்பையில் T20 தொடரின் இறுதிப் போட்டி நடைபெறும்.
இங்கிலாந்துக்கு எதிரான T20 தொடருக்கான இந்திய அணி: சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி, அக்சர் படேல், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல்.