ஈவு இரக்கமற்ற அடி..எப்படி போட்டாலும் அடிக்கறான்டா மொமன்ட்!சாம்சன் ராக்கெட் வேக சதம் - டி20இல் அதிக ஸ்கோர் அடித்து சாதனை
ஓபனர் சாம்சன் ராக்கெட் வேக சதம் அடிக்க , அவருடன் இணைந்து சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரியான் பராக் ஆகியோரின் அதிரடியால் டி20 கிரிக்கெட்டில் அதிக ஸ்கோரை குவித்து இந்தியா சாதனை புரிந்துள்ளது. இந்திய இன்னிங்ஸில் 25 பவுண்டரி, 22 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது.
இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் வங்கதேசம் அணி 2 டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. அதேபோல் டி20 தொடரில் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வைரஸ் காய்ச்சல் காரணமாக அவர் இடம்பெறவில்லை. இந்த போட்டியில் மஹேதி ஹாசன், தன்சித் ஹாசன் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த போட்டி வங்கதேசம் அணியின் ஆல்ரவுண்டர் மஹ்மதுல்லா கடைசி டி20 போட்டியாக அமைந்துள்ளது. 17 ஆண்டுகள் 41 நாள்கள் டி20 போட்டியில் விளையாடி, நீண்ட டி20 கேரியரை கொண்ட மூன்றாவது வீரராக மாறியுள்ளார்.
வங்கதேசம் பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் கேப்டன் நஜ்மூல் ஹொசைன் ஷாண்டோ பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 297 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 111, சூர்யகுமார் யாதவ் 75, ஹர்திக் பாண்டியா 47, ரியான் பராக் 34 ரன்கள் அடித்தனர்.
இந்தியாவின் இந்த ஸ்கோர் டி20 கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் என்ற சாதனையாக அமைந்துள்ளது.
சஞ்சு சாம்சன் முதல் டி20 சதம்
இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் பேட்டிங்கில் பெரிதாக ரன் குவிக்காமல் சொதப்பிய சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் பீஸ்ட் மோட் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இன்னிங்ஸ் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் சர்வதேச டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தை அடித்தார். 40 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்த அவர், அதிவேகமாக டி20 சதமடித்த இரண்டாவது இந்தியர் என்ற சாதனை புரிந்தார். சதமடித்ததுடன் வழக்கம்போல் தனது பைசெப்களை மடக்கி கெத்து காட்டினார் சாம்சன்.
முதலில் 22 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்த சாம்சன், அடுத்த 18 பந்துகளில் அடுத்த 50 ரன்களை அடித்தார். அவர் தனது இன்னிங்ஸில் 11 பவுண்டரி, 8 சிக்ஸர்கள் பறக்க விட்டநிலையில் 47 பந்துகளில் 111 ரன்கள் அடித்து அவுட்டானார்.
சஞ்சு சாம்சன் - சூர்யகுமார் பார்ட்னர்ஷிப்
ஆட்டத்தின் 2.1 ஓவரில் அணியின் ஸ்கோர் 23 என இருந்தபோது ஓபனரான அபிஷேக் ஷர்மா 4 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதன் பிறகு சஞ்சு சாம்சன் - சூர்யகுமார் யாதவ் இணைந்து வங்கதேசம் பவுவர்களை ஈவு இரக்கம் இல்லாமல் அடித்து துவைத்தனர். இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 173 ரன்கள் சேர்த்தனர். கேப்டன் சூர்யகுமார் யாதவ் 23 பந்துகளில் தனது அரைசதம் பூர்த்தி செய்தார். 35 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரி, 5 சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
ஏற்கனவே முதல் இரண்டு டி20 போட்டிகளில் தோல்வியை தழுவி தொடரை இழந்திருக்கும் வங்கதேசம், ஆறுதல் வெற்றியை பெற வேண்டுமானால் 298 ரன்கள் சேஸ் செய்து வரலாறு படைக்க வேண்டும்.
டாபிக்ஸ்