கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கிய இந்தியா..அவன் ஊரிலேயே தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக தரமான சம்பவம்!கையில் டி20 கோப்பை
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என ஒன்மேன் ஷோ காட்டிய இந்திய வீரர்கள், தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக கத்துகிட்ட மொத்த வித்தையும் இறக்கி தரமான சம்பவம் செய்துள்ளனர். கையில் டி20 கோப்பையுடன் நாடு திரும்புகிறார்கள்.
தென் ஆப்பரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்தியா அணி நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் முடிந்திருக்கும் நிலையில் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை வகிக்கிறது.
இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஜோகன்னஸ்பெர்க் வான்டர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. கடந்த போட்டியில் விளையாடிய அதே அணியுடன் இந்தியா களமிறங்கியது. தொடரில் முன்னிலை பெற்றிருந்தாலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டும் கோப்பையை வெல்ல முடியும் என்ற நிலையில் இந்தியாவும், தோல்வியை தவிர்த்து தொடரை சமன் செய்யும் முனைப்பில் தென் ஆப்பரிக்காவும் களமிறங்கின.
இந்தியா வரலாற்று சாதனை
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தனது தேர்வு சரி என்பதை நிருபிக்கும் விதமாக இந்தியா இதுவரை இல்லாத அளவில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 கிரிக்கெட்டில் அதிக ஸ்கோர் எடுத்து வரலாற்று சாதனை புரிந்தது.
20 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 283 ரன்கள் குவித்து இந்தியா டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த அணி, தென் ஆப்பரிக்காவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த அணி என்ற வரலாறு நிகழ்த்தியது.
இந்திய இன்னிங்ஸில் திலக் வர்மா 120, சஞ்சு சாம்சன் 109 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். இவர்கள் இருவரும் இணைந்து 210 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தென் ஆப்பரிக்கா அணியில் மொத்தம் 7 பவுலர்கள் பந்து வீசிய நிலையில் அனைவரும் ரன்களை வாரி வழங்கி வள்ளல்களாக இருந்தனர். அனைத்து பவுலர்களுக்கும் எகானமியும் 10 ரன்களுக்கு மேல் என உள்ளது.
தென் ஆப்பரிக்கா சேஸிங்
இதையடுத்து நினைத்து கூட பார்க்க முடியாத இலக்கை சேஸ் செய்த தென் ஆப்பரிக்கா 18.2 ஓவரில் 148 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டாகியுள்ளது. இதனால் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அத்துடன் டி20 தொடரையும் 3-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை தட்டியுள்ளது.
தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்களில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் 43, டேவிட் மில்லர் 36, மார்கோ ஜான்சன் 29 ரன்கள் எடுத்தனர். இந்திய பவுலர்கள் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா, ரமனாதீப் சிங், ரவி பிஷ்னோய் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
தென் ஆப்பரிக்கா தனது இன்னிங்ஸை தொடங்கியபோது 2 ஓவரில் 10 ரன்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஸ்டப்ஸ், மில்லர் மற்றும் கடைசி கட்டத்தில் ஜான்சன் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் படுமோசமான தோல்வியிலிருந்து தப்பித்தது.
வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி
முன்னதாக பேட்டிங்கில் தென் ஆப்பரிக்கா பவுலர்கள் துவம்சம் செய்த இந்திய பேட்ஸ்மேன்கள், பின்னர் பவுலிங்கில் தென் ஆப்பரிக்கா பேட்ஸ்மேன்களை கலங்கடித்தனர். ஒட்டுமொத்தமாக கத்துகிட்ட மொத்த வித்தையும் தென் ஆப்பரிக்கா அணிக்கு எதிராக அவர்களின் இடத்தில் வைத்தே இறக்க வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பதிவு செய்துள்ளனர்.