"என்னப்பா விக்கெட்டே எடுக்கல.. இந்தா வாங்கிக்கோ" - சிட்னியில் பும்ராவின் தரமான சம்பவம் - முதல் நாளில் பவுலர்கள் ஆதிக்கம்
ஆஸ்திரேலியா ஓபனர் கான்ஸ்டாஸ் ஸ்லெட்ஜிங் செய்த அடுத்த நிமிடமே விக்கெட் வீழ்த்தி தரமான சம்பவம் செய்துள்ளார் இந்திய வேகம் ஜஸ்ப்ரீத் பும்ரா. சிட்னி டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் பவுலர்களுக்கான நாளாக அமைந்துள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி சிட்னியில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் பார்மில் இல்லாத அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் சுப்மன் கில் சேர்க்கப்பட்டார். அத்துடன் இந்திய அணிக்கு இந்த போட்டியில் கேப்டனாக ஜஸ்ப்ரீத் பும்ரா செயல்பட்டார்
இந்தியா பேட்டிங்
இதையடுத்து டாஸ் வென்ற இந்திய கேப்டன் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 72.2 ஓவரில் 185 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 40, ரவீந்திர ஜடேஜா 26, ஜஸ்ப்ரீத் பும்ரா 22, சுப்மன் கில் 20 ரன்கள் எடுத்தனர்.
ஆஸ்திரேலியா பவுலர்களில் அற்புதமாக பவுலிங் செய்த போலாந்து 4, ஸ்டார்க் 3, கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடர்ந்த ஆஸ்திரேலியா 3 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் எடுத்த நிலையில், முதல் நாள் ஆட்டம் முடிவுற்றது.
இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பல்
கடந்த நான்கு போட்டிகளில் பேட்டிங்கில் ஜொலிக்காத இந்திய அணியின் டாப் ஆர்டர் கதை இந்த போட்டியிலும் தொடர்ந்தது. ஓபனர்களான கேஎல் ராகுல் 4, ஜெய்ஸ்வால் 10 என அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதன் பின்னர் கோலி - கில் இணைந்து சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சிறப்பாக விளையாடி வந்த கில், உணவு இடைவேளுக்கு முன் கடைசி பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் கோலியும் வழக்கம் போல் அவுட்சைடு ஆஃப் பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப் வசம் சிக்கினார்.ஒரு பவுண்டரி கூட அடிக்காத கோலி 69 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார். டாப் 4 விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில் பண்ட் - ஜடேஜா ஜோடி நிதானத்தை கடைப்பிடித்து பேட் செய்தனர். பண்ட் வழக்கமான தனது அதிரடி பாணியை கைவிட்டு அமைதியாக விளையாடினார்.
ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகள் பண்ட் உடலில் தாக்கி காயம் ஏற்படுத்தியபோதிலும் அவர் நிதானத்தை கடைப்பிடித்தார். இருவரும் இணைந்து 48 ரன்கள் சேர்த்தனர். பண்ட் 40 ரன்னில் நடையை கட்ட, அடுத்த வந்த நிதிஷ் குமார் ரெட்டி முதல் பந்திலேயே டக் அவுட்டானார்.
இவரை தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர் கொஞ்சம் நேரம் தாக்குபிடித்து 14 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதற்கிடையே பொறுப்புடன் பேட் செய்து வந்த ஜடேஜாவும் 26 ரன்கள் அடித்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் பேட் செய்ய வந்த பும்ரா கொஞ்சம் அதிரடி காட்டி 17 பந்துகளில் 22 ரன்கள் குவித்து வெளியேறினார்.
பவுலிங்கில் சம்பவம் செய்த பும்ரா
தனது முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலியா தொடங்கிய நிலையில் உஸ்மான் கவாஜா - சாம் கான்ஸ்டாஸ் ஆகியோர் ஓபனர்களாக களமிறங்கினார்கள். ஆட்டத்தின் 3வது ஓவர் கடைசி பந்தை பும்ரா வீசி தயாரானபோது நான் ஸ்டிரைக்கரில் இருந்த கான்ஸ்டாஸ், பும்ரா ஸ்லெட்ஜ் செய்தார். விக்கெட் எடுக்கவ இல்லை என்பது போல் சீண்டினார். இதற்கு உனக்கு என்னதான் பிரச்னை என்பது போல் பும்ராவும் பதிலடி கொடுத்து பந்து வீச தயாரானார்.
அப்போது முதல் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தை வீசிய பும்ரா, ஸ்டிரைக்கில் இருந்து உஸ்மான் கவாஜா விக்கெட்டை தூக்கினார். ஸ்லிப்பில் இருந்த கேஎல் ராகுல் வசம் சிக்கிய கவாஜா 2 ரன்னில் நடையை கட்டினார். கான்ஸ்டாஸ் சீண்டிய அடுத்த பந்திலேயே விக்கெட் வீழ்த்தி பும்ரா தரமான சம்பவம் செய்த நிலையில், ஒட்டு மொத்த இந்திய வீரர்களும் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து அந்த விக்கெட்டை கொண்டாடினார்.
தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியா 174 ரன்கள் பின் தங்கியுள்ளது. ஆடுகளம் பந்து வீச்சுக்கு நன்கு எடுபடும் நிலையில் நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தில் பரபரப்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்
டாபிக்ஸ்