IND vs PAK Innings Break: பார்ட்னர்ஷிப் அமையல! தவறான ஷாட்களால் பாகிஸ்தானுக்கு விக்கெட்டுகளை தரை வார்த்த இந்தியா
ஒரு கட்டத்தில் வலுவான நிலையில் இருந்த இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமையாமல் போக, தவறான ஷாட்களால் பாகிஸ்தான் பவுலர்களுக்கு தங்களது விக்கெட்டுகளை தரை வார்த்தனர் இந்தியா பேட்ஸ்மேன்கள்.
டி20 உலகக் கோப்பை 2024 தொடரின் 19வது போட்டி குரூப் ஏ பிரிவில் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த போட்டி மழை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது.
இந்த போட்டி தொடங்கும் முன்னர், இந்தியா தனது முதல் போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், டி20 உலகக் கோப்பை தொடரை பாசிடிவாக தொடங்கியுள்ளது.
பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் யுஎஸ்ஏ அணிக்கு எதிராக சூப்பர் ஓவரில் தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் அணியின் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது.
பாகிஸ்தான் பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 18.5 ஓவரில் 119 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டாகியுள்ளது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 42, அக்ஷர் படேல் 20 ரன்கள் அடித்தனர்.
இந்தியா பேட்டிங் தடுமாற்றம்
ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் என இந்தியா வலுவாக இருந்தது. அப்போது களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதைத்தொடர்ந்து ஷிவம் டூபே, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்ட்யா என அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றினார்.
தொடக்க பேட்ஸ்மேன்களான விராட் கோலி 4, ரோகித் ஷர்மா 13 ரன்கள் அடித்து சொதப்பலான இன்னிங்ஸை வெளிப்படுத்தினர். பார்ட்னர்ஷிப் அமைக்க முடியாமலும், தவறான ஷாட்களாலும் இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து பெரிய ஸ்கோரை எடுக்க தவறினர்.
பாகிஸ்தான் பவுலர்களில் நசீம் ஷா, ஹரிஸ் ராஃப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், முகமது ஆமிர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
7 பேர் ஒற்றை இலக்கத்தில் காலி
இந்திய அணியின் மிடில் ஆர்டர் தவறான ஷாட்களை விளையாடி தங்களது விக்கெட்டுகளை பாகிஸ்தான் பவுலர்களுக்கு தாரை வார்த்தனர். மொத்த 7 பேட்ஸ்மேன்கள் இந்திய அணியில் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர். இதில் ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் முதல் பந்திலேயே டக் அவுட்டானார்கள்.
அக்ஷர் படேல் - ரிஷப் பண்ட் பார்ட்னர்ஷிப்
இந்திய பேட்டிங்கில் அக்ஷர் படேல் - ரிஷப் பண்ட் பார்ட்னர்ஷிப் ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்தது. இருவரும் இணைந்து 39 ரன்கள் சேர்த்தனர். இதுவே இந்திய இன்னிங்ஸில் அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக அமைந்தது.
வழக்கமாக லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாக களமிறங்கும் அக்ஷர் படேல், திடீரென புரொமோட் செய்யப்பட்டு மூன்றாவது நான்காவது பேட்ஸ்மேனாக பேட் செய்ய அனுப்பப்பட்டார். இதற்கு பலனும் கிடைத்தது.
சிறிய கேமியோ இன்னிங்ஸை வெளிப்படுத்திய அக்ஷர் படேல், 18 பந்துகளில் 20 ரன்கள் அடித்துவிட்டு அவுட்டானார்.
ரிஷப் பண்ட் பொறுப்பான பேட்டிங்
தொடக்கத்தில் ரன் அடிக்க தடுமாறிய பண்ட் நிதானத்தை கடைப்பிடித்து பொறுப்புடன் பேட் செய்தார். தனது பாணியிலான ஷாட்கள் மூலம் அவ்வப்போது பவுண்டரிகளையும் அடித்து ரன்கள் சேர்த்தார். சிறப்பாக பேட் செய்து 31 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த பண்ட் பெரிய ஷாட் ஆட முயற்சித்து அவுட்டானார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்