Ind vs Eng 4th T20: "எங்க ஏரியா உள்ள வராத" 17வது தொடர் வெற்றி.. துபேவுக்கு மாற்று வீரராக வந்து தாக்கம் தந்த ராணா
Ind vs Eng 4th T20: ஷிவம் துபேவுக்கு பதிலாக கன்கஷன் வீரராக களமிறங்கி தாக்கத்தை ஏற்படுத்திய ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். உள்ளூரில் நடைபெற்ற டி20 தொடரில் தொடர்ச்சியாக 17வது தொடரை வென்று இந்தியா சாதித்துள்ளது

இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் என முழுவதுமான வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து முதலில் டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்ற நிலையில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
பின்னர் ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேவில் வைத்து இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்ததது. இந்த ஸ்கோரை சேஸ் செய்த இங்கிலாந்து 19.4 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல்அவுட்டான நிலையில், 15 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. அத்துடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.