Ind vs Eng: சுழல் ஜாலம்.. எல்லா ஏரியாவிலும் நான் தான் கில்லி.. இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை கதறவிட்ட வருண்
Ind vs Eng 3rd T20: இங்கிலாந்து மிடில் ஆர்டரை கதறவிட்ட வரும் இரண்டு ஓவர்களில் பொட்டலம் கட்டி பெவிலியனுக்கு அனுப்பினார். லியான் லிவிங்ஸ்டன் கடைசி வரை அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயர்த்தியுள்ளார்.

இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் என முழுவதுமான வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து முதலில் டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பின்னர் சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்ற நிலையில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கும் நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். 14 மாதங்களுக்கு பிறகு அவர் சர்வதேச போட்டியில் களமிறங்கியுள்ளார்.
இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறல்
இந்த தொடரில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், பவுலிங்கை தேர்வு செய்தார். இதைதத்தொடர்ந்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. ஓபனர் பென் டக்கெட் 51, லிவிங்ஸ்டன் 43 ரன்கள் எடுத்தனர். நல்ல பார்மில் இருந்து வரும் பட்லர் 24 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
இந்திய பவுலர்களில் ஸ்பின்னரான தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் ரவி பிஷ்னோய் மற்றும் அக்ஷர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.
ஸ்பின் ஜாலம் செய்த வருண்
இந்த தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் தனது அற்புதமான ஸ்பின் பவுலிங்கால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடித்து வந்த வருண் இந்த போட்டியிலும் தொடர்ந்தார். இங்கிலாந்து மிடில் ஆர்டரை இரண்டே ஓவர்களில் பார்செல் செய்தார். 4 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடான் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் அடுத்தடுத்த ஓவர்களில் தூக்கினார். முன்னதாக அதிரடியில் மிரட்டி வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்தியாவில் டி20 போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை நிகழ்த்தினார். வருண் சக்கரவத்தியின் திருப்புமுனை பவுலிங்கால் இங்கிலாந்தின் ரன் குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.
அடிமேல் அடி வாங்கும் பிஷ்னோய்
இந்தியா அணியின் மற்றொரு ஸ்பின் பவுலாரன ரவி பிஷ்னோய் இந்த தொடரில் முதல் விக்கெட்டை மூன்றாவது போட்டியான இன்று தான் வீழ்த்தினார். இருப்பினும் அவர் பவுலிங்குக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ரன் வேட்டை நிகழ்த்தியுள்ளனர். 4 ஓவர்களில் 46 ரன்களை வாரி வழங்கியுள்ளார்.
முதல் போட்டியில் விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் 4 ஓவரில் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து கட்டுப்பாடுடன் பந்து வீசினார். இரண்டாவது போட்டியிலும் விக்கெட் எடுக்காவிட்டாலும் 4 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இந்த போட்டியில் விக்கெட் வீழ்த்திய போதிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுத்துள்ளார்.
அதேபோல் தனது கம்பேக் போட்டியில் முகமது ஷமியும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 3 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்த விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்