Ind vs Eng 3rd T20: தடுமாறிய இந்திய பேட்ஸ்மேன்கள்.. தலைதப்பிய இங்கிலாந்து.. ராஜ்கோட்டில் உப்புசப்பில்லாத ஆட்டம்
Ind vs Eng 3rd T20: இங்கிலாந்தின் 172 ரன்கள் சேஸை விரட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். கட்டாய வெற்றி பெற்றாக வேண்டிய போட்டியில் இங்கிலாந்து பவுலர்கள் தங்களது துல்லிய பவுலிங்கால் இந்தியாவை வீழ்த்தியுள்ளனர்.

இந்தியா சுற்றுப்பயணம் வந்திருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் என முழுவதுமான வெள்ளை பந்து கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதையடுத்து முதலில் டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. பின்னர் சேப்பாக்கத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்ற நிலையில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ராஜ்கோட்டில் இன்று நடைபெற்றது. கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர் இழப்பதை தவிர்த்தது.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்த நிலையில், பின்னர் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.