IND vs ENG 2nd T20: சேப்பாக்கத்தில் திக் திக்.. முடிச்சுவிட்ட திலக் வர்மா.. கம்பீர் புன்னகை - போராடிய இங்கிலாந்து தோல்வி
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Eng 2nd T20: சேப்பாக்கத்தில் திக் திக்.. முடிச்சுவிட்ட திலக் வர்மா.. கம்பீர் புன்னகை - போராடிய இங்கிலாந்து தோல்வி

IND vs ENG 2nd T20: சேப்பாக்கத்தில் திக் திக்.. முடிச்சுவிட்ட திலக் வர்மா.. கம்பீர் புன்னகை - போராடிய இங்கிலாந்து தோல்வி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jan 25, 2025 10:38 PM IST

IND vs ENG 2nd T20: அடுத்தடுத்து இந்திய பேட்ஸ்மேன்கள் பெவிலியின் திரும்பி கொண்டிருக்க இளம் பேட்ஸ்மேனான திலக் வர்மா அதிரடியை விடாமல் தொடர்ந்தார். கடைசி ஓவர் வரை திக் திக் என சென்ற ஆட்டத்தில் இங்கிலாந்தின் போராட்டம் வீணாக, இந்தியா த்ரில் வெற்றி பெற்றது.

சேப்பாக்கத்தில் திக் திக்.. முடிச்சுவிட்ட திலக் வர்மா.. கம்பீர் புன்னகை - போராடிய இங்கிலாந்து தோல்வி
சேப்பாக்கத்தில் திக் திக்.. முடிச்சுவிட்ட திலக் வர்மா.. கம்பீர் புன்னகை - போராடிய இங்கிலாந்து தோல்வி (PTI)

இதைத்தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் அணி இரு அணிகளும் வெற்றிக்காக போரடின. இதில் 19.2 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து இந்தியா த்ரில் வெற்றியை பெற்றது.

முதல் போட்டியில் விளையாடிய ரிங்கு சிங், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரல் ஆகியோர் சென்னை போட்டியில் சேர்க்கப்பட்டனர்.

இங்கிலாந்து அதிரடி

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின்னர் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் குவித்தது. கேட்பன் ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 45 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டமாக அதிரடி காட்டிய பிரைடன் கார்ஸ் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 31 ரன்கள் எடுத்தார்.

இந்திய பவுலர்களில் ஸ்பின்னர்களான வருண் சக்கரவர்த்தி, அக்‌ஷர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங், அபிஷேக் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர்.

இந்தியா த்ரில் சேஸிங்

முதல் போட்டியில் அதிரடியான தொடக்கத்தை தந்த சஞ்சு சாம்சன் 5, அபிஷேக் ஷர்மா 12 என அடுத்தடுத்து அவுட்டாகி வெளியேறினார்கள். பார்மில் இல்லாமல் தவித்து வரும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் 12 ரன்னில் நடையை கட்டினார்.

பின்னர் களமிறங்கிய துருவ் ஜுரல் 4, ஹர்திக் பாண்டியா 7 என ஒற்றை இலக்கத்தில் வெளியேற இந்தியா 10 ஓவர்களுக்குள் முதல் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது.

ஒரு புறம் விக்கெட்டுகளை சரிந்தாலும் மறுமுனையில் களமிறங்கியது முதல் அதிரடியாக பேட் செய்து வந்த திலக் வர்மா பவுண்டரி, சிக்ஸர் என விளாசி ரன்களை குவித்து வந்தார்.

திலக் வர்மா - வாஷிங்டன் சுந்தர் பார்ட்னர்ஷிப்

ஆட்டத்தின் 9.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் என இருந்த போது தமிழ்நாட்டை சேர்ந்த ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் களமிறங்கினார். திலக் வர்மாவுடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த இவர் விக்கெட் சரிவை தடுத்ததுடன், விரைவாக ரன்கள் குவித்து பேட்டிங்கிலும் பங்களிப்பு அளித்தார். 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார் வாஷிங்டன் சுந்தர். அப்போது அணியின் ஸ்கோர் 13.4 ஓவரில் 116 என இருந்தது. இவர்கள் இருவரும் இணைந்து 38 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

திலக் வர்மா பினிஷ்

வாஷிங்டன் சுந்தரை தொடர்ந்து வந்த அக்‌ஷர் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாக ஆட்டம் இங்கிலாந்து பக்கம் திரும்பியது. கைவசம் இரண்டு விக்கெட்டுகள் மட்டும் இருக்க 20 ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற சூழ்நிலையில் டெயிலண்டர் ரவி பிஷ்னோயை எதிர்திசையில் வைத்துக்கொண்டு எவ்வித பதட்டமும் இல்லாமல் சிறப்பாக விளையாடினார் திலக் வர்மா.

பிஷ்னோய் தன் பங்குக்கு இரண்டு பவுண்டரிகளுடன் 9 ரன்கள் அடித்தார். கடைசி ஓவரில் 6 பந்துகளுக்கு 6 ரன்கள் தேவை என்று இருந்த நிலையில ஸ்டிரைக்கில் இருந்த திலக் வர்மா இரண்டே பந்துகளில் ஆட்டத்தை பினிஷ் செய்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து வரும் திலக் வர்மா 55 பந்துகளில் 72 ரன்கள் எடுத்துள்ளார். தனது இன்னிங்ஸில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடித்துள்ளார். சிறப்பாக பினிஷ் செய்த திலக் வர்மாவை பார்த்து டக்கவுட்டில் இருந்த கம்பீர் புன்னகை வெளிப்படுத்தினார்.

இங்கிலாந்து பவுலர்களில் பேட்டிங்கில் கேமியோ இன்னிங்ஸ் வெளிப்படுத்திய பிரைடன் கார்ஸ், பவுலிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மார்க் உட், அடில் ரஷித், ஜேமி ஓவர்டன், லயாம் லிவிங்ஸ்டன், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை எடுத்தனர். ஸ்டிரைக் பவுலரான ஆர்ச்சர் 4 ஓவர்களில் 60 ரன்களை வாரி வழங்கினார்.

இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.

 

 

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.