IND vs AUS 3rd T20 Result: ‘மேக்ஸ் நீ வேற லெவல் பா’-சதம் விளாசி அணியை ஜெயிக்க வைத்த மேக்ஸ்வெல்!
IND vs AUS: ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.
இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்தது. இதையடுத்து, 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இன்னும் சண்டை செய்ய ஆஸி., காத்திருக்கிறது.
அஸ்ஸாம் மாநிலம், கவுஹாட்டியில் இன்றிரவு 7 மணிக்கு 3வது டி20 ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் விளையாடிய இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை குவித்தது. ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசி அசத்தினார்.
223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா விளையாடியது. அந்த அணி 20 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி கண்டது. அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 104 ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றார். கடைசி பந்தில் பவுண்டரி விளாசி அணியை த்ரில் வெற்றி பெறச் செய்தார்.
தற்போது 2-1 என்ற கணக்கில் இந்த டி20 கிரிக்கெட் தொடர் உள்ளது. இந்தியாதான் தொடரில் முன்னிலையில் இருக்கிறது. அடுத்த டி20 ஆட்டம் டிசம்பர் 1ம் தேதி ராய்ப்பூரில் நடக்கிறது.
அந்த ஆட்டத்தில் இந்தியா ஜெயித்தால் தொடரைக் கைப்பற்றிவிடும்.
முன்னதாக, இன்றைய போட்டியில், உலகக் கோப்பையை ஆஸி., ஜெயிக்க காரணமாக இருந்த டிராவிஸ் ஹெட், 35 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து ஆரோன், ஜோஷ், ஸ்டோய்னிஸ் ஆகியோரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால், ஆஸ்திரேலியா ஒருகட்டத்தில் தள்ளாடியது. ஆனால், நம்பிக்கை நாயகனாக களம் புகுந்த மேக்ஸ்வெல் வழக்கம்போல் தனது பேட்டிங் மேஜிக்கால் அசத்தினார். அரை சதம் விளாசி அவர் அதிரடி காண்பித்தார். பின்னர் சதமும் கண்டார்.
ரவி பிஷ்ணோய் 2 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப், அவேஷ் கான், அக்சர் படேல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முன்னதாக, முதலில் விளையாடி இந்திய அணியின் ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, சூர்யகுமார் யாதவ் நின்று ஆடினார். ஜெய்ஸ்வால் 6 ரன்களிலும், இஷான் கிஷன் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தார்.
சூர்யகுமார் யாதவ்,29 பந்துகளில் 39 ரன்களை விளாசி ஆரோன் பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
நிதானமாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட், அரை சதம் பூர்த்தி செய்தார். 32 பந்துகளில் அரை சதம் விளாசிய அவர், தொடர்ச்சியாக அதிரடி காட்டி புல்லட் வேகத்தில் விளையாடினார்.
இதையடுத்து, அதே வேகத்தில் சதம் விளாசி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார். 52 பந்துகளில் அவர் சதம் பதிவு செய்தார். மறுபக்கம் திலக் வர்மா அவருக்கு தோள் கொடுத்தார்.
ஆஸி.,க்கு எதிராக டி20இல் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் ருதுராஜ் தான். 20 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 222 ரன்களை குவித்தது.
223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா சேஸிங் செய்தது.
முன்னதாக, ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது. அதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் நடந்த ஆட்டத்தில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்