Kapil Dev: இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப்போட்டி! "என்னை யாரும் அழைக்கவில்லை" - கபில்தேவ் ஷாக் பகிர்வு
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலகக் கோப்பை 2023 தொடரை நேரில் வந்து பார்க்க எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்று இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான கபில் தேவ் கூறியுள்ளார்.
உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டி இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக உலக சாம்பியன் ஆனது.
ட்ரெண்டிங் செய்திகள்
முன்னதாக இந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பார்ப்பதற்கு, ஏற்கனவே உலகக் கோப்பை வென்ற கேப்டன்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதற்கு இந்தியா அணிக்கு முதல் முறையாக உலகக் கோப்பை பெற்று தந்த கேப்டனான கபில்தேவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
"அகமதாபாத் வந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டி பார்ப்பதற்காக என்னை அழைக்கவில்லை. அதனால் நான் வரவில்லை. 83இல் விளையாடிய அணியினர் அனைவரும் என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன், ஆனால் இது ஒரு பெரிய நிகழ்வு என்பதாலும், மற்ற பொறுப்புகளை கையாளுவதில் மும்முரமாக இருப்பதாலும், இதை செய்ய மறந்திருக்ககூடும் என நினைக்கிறேன்" என்றார்.
இந்தியாவுக்கு இரண்டாவது உலகக் கோப்பையை 2011இல் வென்று கொடுத்த எம்எஸ் தோனி, தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து வீட்டில் அமர்ந்தவாறு உலகக் கோப்பை 2023 இறுதிப்போட்டியை பார்த்து ரசித்துள்ளார். இதுதொடர்பான விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
அதேபோல் இந்திய அணியின் முன்னாள் கேப்டன், பிசிசிஐ தலைவருமான செளரவ் கங்குலிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் இந்தியா - ஆஸ்திரேலியா இறுதிப்போட்டியை நேரில் கண்களித்தார்.
உலகக் கோப்பை இறுதிப்போட்டியை பாலிவுட் சினிமா பிரபலங்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் பலரும் நேரில் பார்த்துள்ளனர்.