GG Women vs MI Women: பவுலிங், பேட்டிங்கில் கலக்கிய பிரண்ட்.. குஜராத்தை பின்னுக்கு தள்ளி முன்னேறிய மும்பை இந்தியன்ஸ்
GG Women vs MI Women: முதலில் பவுலிங், பின்னர் பேட்டிங்கில் கலக்கிய பிரண்ட் ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் மகளிர் இந்த சீசனில் முதல் வெற்றியை பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலிலும் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 5வது போட்டி யுபி வாரியர்ஸ் மகளிர் - மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணிகளுக்கு இடையே வதோத்ராவில் நடைபெற்றது. இதில் குஜராத் அணி 2 போட்டிகள் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியை சந்தித்துள்ள நிலையில், முதல் போட்டியில் தோல்வியை தழுவிய மும்பை இந்தியன்ஸ் வெற்றி பயணத்தை தொடங்கும் முனைப்புடன் களமிறங்கியது.
இதையடுத்து முதலில் பவுலிங் செய்த மும்பை இந்தியன்ஸ் மகளிர், குஜராத் ஜெயன்ட்ஸ் மகளிர் அணியை நன்கு கட்டுப்படுத்தி 120 ரன்களில் சுருட்டியது. இதன் பின்னர் எளிய இலக்கை சேஸ் செய்த மும்பை இந்தியன்ஸ் மகளிர் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை சேஸிங்
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியினரின் தரமான பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறிய குஜராத் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹர்லீன் தியோல் 32, காஷ்வி கெளதம் 20 ரன்கள் எடுத்தனர்.
மும்பை பவுலர்களில் ஹேலி மேத்யூஸ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நாட் ஸ்கைவர்-பிரண்ட், அமெலியா கெர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடந்து சேஸிங்கில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் மகளிர் 16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு, 23 பந்துகள் எஞ்சியிருக்க 122 ரன்கள் எடுத்து இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. குஜராத் பவுலர்களில் பிரியா மிஷ்ரா, காஷ்வி கெளதம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அத்துடன் இரண்டாவது இடத்தில் இருந்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி அந்த இடத்துக்கு முன்னேறியது. தற்போதைய நிலையில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் ஆர்சிபி அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.
பேட்டிங், பவுலிங்கில் கலக்கிய பிரண்ட்
மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியில் ஓபனர்களாக களமிறங்கிய ஹேலி மேத்யூஸ், யஸ்திகா பாட்யா ஜோடி அதிரடியான தொடக்கத்தை தர தவறினர். மேத்யூஸ் 17, பாட்யா 8 ரன் அடித்து வெளியேற, பின்னர் வந்த நாட் ஸ்கைவர்-பிரண்ட் அதிரடி பேட்டிங்கால் ரன் குவிப்பில் ஈடுபட்டார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் 4 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் ஆட்டத்தை தனது பொறுப்பில் எடுத்துக்கொண்ட பிரண்ட் மைதானத்தின் நாலாபுறமும் பவுண்டரிகளை விளாசினார்.
பிரண்ட் உடன் இணைந்து அமெலியா கெர் பார்ட்னர்ஷிப் அமைக்க மும்பை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. நன்றாக பேட் செய்து வந்த கெர் 19 ரன்கள் எடுத்திருந்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதற்கிடையே அதிரடி இன்னிங்ஸை வெளிப்படுத்தி வந்த பிரண்ட் 33 பந்துகளில் அரைசதமடித்தார். தொடர்ந்து 39 பந்துகளில் 57 ரன்கள் அடித்த அவர் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அப்போது அணியின் ஸ்கோர் 114 என இருந்தது. இதன் பின்னர் சஞ்சீவன் சஞ்சனா, கமாலினி ஆகியோர் இணைந்து ஆட்டத்தை பினிஷ் செய்தனர்.
பேட்டிங் பவுலிங் என இரண்டிலும் கலக்கிய பிரண்ட் மும்பை அணிக்கு வெற்றிய தேடி தர முக்கிய காரணமாக அமைந்தார். இருப்பினும் பவுலிங்கில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய ஹேலி மேத்யூஸ் ஆட்டநாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்