Gautam Gambhir: ‘சூர்யகுமார் ஏன் 7வது வரிசையில் இறக்கப்பட்டார்?’-கம்பீர் கேள்வி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ரோஹித் ஷர்மாவின் முக்கியமான முடிவுகளில் ஒன்றை கவுதம் கம்பீர் மற்றும் வாசிம் அக்ரம் சாடினர்.
‘உலகக் கோப்பை பைனலில் சூர்யகுமார் ஏன் 7வது வரிசையில் இறக்கப்பட்டார்?’ என இந்திய முன்னாள் வீரர் கம்பீர் கேள்வி எழுப்பினார்.
ட்ரெண்டிங் செய்திகள்
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. தொடர்ச்சியாக 10 வெற்றிகளுக்குப் பிறகு அணி ஏன் தோல்வியடைந்தது என்பது குறித்து பல விவாதங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில், பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம், இந்திய கிரிக்கெட் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் கவுதம் கம்பீர் ஆகியோர் ரோகித் சர்மாவின் முக்கிய முடிவு குறித்து விமர்சித்தனர்.
ரிக்கி பாண்டிங், நாசர் ஹுசைன், ஹர்பஜன் சிங் ஆகிய சில புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் அகமதாபாத் ஆடுகளத்தால் இந்தியா தோல்வி அடைந்தது என்று கருத்து தெரிவித்திருந்தனர்.
அதே நேரத்தில் சுனில் கவாஸ்கர் மற்றும் வீரேந்திர சேவாக் போன்றவர்கள் கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி இடையேயான 67 ரன்களின் மோசமான கூட்டணியால் இந்தியாவுக்கு போட்டி தோல்வி வந்தது என கூறினர். இருப்பினும், கவுதம் கம்பீர் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் ரோஹித் ஷர்மாவின் முக்கிய முடிவு ஒன்றை குறை கூறினர்.
சூர்யகுமார் யாதவ் நம்பர் 6 வது வரிசையில் தான் இறங்க வேண்டியிருந்தது. போட்டி முழுவதும் இந்தியாவிற்கு அதுதான் வரிசையாக இருந்தது. ஆனால், இறுதிப்போட்டியில் அவர் 7வது வீரராக களம் புகுந்தார்.
ஸ்போர்ட்ஸ்கீடாவிடம் பேசிய கம்பீர் மற்றும் அக்ரம் இருவரும் இந்த திடீர் மாற்றத்தைக் கண்டு ஆச்சரியமடைந்ததாக கூறினர்.
"சூர்யகுமார் யாதவை தான் முன்பே களமிறக்கியிருக்க வேண்டும். ஜடேஜா ஏன் அனுப்பப்பட்டார் என்று எனக்கு புரியவில்லை. அவர் ஏன் 7-வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்? அது எனக்கு எங்கும் சரியான முடிவாக தெரியவில்லை” என்று கம்பீர் கூறினார்.
அக்ரம் கூறுகையில், “அவர் அங்கு ஒரு பேட்டராக மட்டுமே விளையாடுகிறார். அதனால், அவரை 6வது வரிசையில் மட்டுமே இறக்கியிருக்க வேண்டும்" என்றார்.
சூர்யகுமாரை 6வது வரிசையில் களம் புக அனுப்பியிருந்தால், அவரது இயல்பான ஆக்ரோஷமான கிரிக்கெட்டுடன் அவர் விளையாடியிருக்கலாம் என்று நினைப்பதாக கம்பீர் தெரிவித்தார்.