டி20 உலகக் கோப்பை வென்ற இலங்கை கிரிக்கெட் வீரர் மீது சூதாட்ட குற்றச்சாட்டு.. பின்னணி என்ன?
இலங்கை அணிக்காக டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியிருக்கும் சச்சித்ர சேனநாயக்க மீது எல்பிஎல் என அழைக்கப்படும் லங்கா ப்ரீமியர் லீக்கில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

2020 லங்கா பிரீமியர் லீக் (LPL) போட்டியின் போது, சக வீரரை மேட்ச் பிக்சிங்குக்கு கவர்ந்திழுக்க முயன்றதாக, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சச்சித்ர சேனநாயக்க மீது ஹம்பாந்தோட்டை உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
முதல் சர்வதேச வீரர்
நாட்டில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் கீழ், ஒரு தேசிய அளவிலான கிரிக்கெட் வீரர் மீது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதற்காக இது முதல் குற்றச்சாட்டு என்று சட்டத்துறை தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் அவர் 2023இல் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
40 வயதான சேனநாயக்க, 2012 மற்றும் 2016க்கு இடையில் இலங்கைக்காக ஒரு டெஸ்ட், 49 ஒருநாள் மற்றும் 24 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி மொத்தம் 78 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவர் டி20 உலகக் கோப்பை வென்ற இலங்கை அணியில் இடம்பிடித்திருந்தார். 2014ஆம் ஆண்டில் வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியாவை வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்ற நிலையில், இந்த தொடரில் 6 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.