தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Fact Check: உலகக் கோப்பையை இதற்கு முன் வென்றபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் இந்திய அணி போட்டோ எடுக்கலையா?

Fact Check: உலகக் கோப்பையை இதற்கு முன் வென்றபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் இந்திய அணி போட்டோ எடுக்கலையா?

Fact Crescendo HT Tamil
Jul 07, 2024 04:46 PM IST

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.

Fact Check: உலகக் கோப்பையை இதற்கு முன் வென்றபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் இந்திய அணி போட்டோ எடுக்கலையா?
Fact Check: உலகக் கோப்பையை இதற்கு முன் வென்றபோது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் இந்திய அணி போட்டோ எடுக்கலையா?

2007ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற போது அப்போதைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பதில் காங்கிரஸ் தலைவராக இருந்த சோனியா காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி என்று ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. இது தொடர்பாக tamil fact crescendo சார்பில் ஆய்வு செய்யப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. நிலைத் தகவலில், “உலக கோப்பை வெற்றி பெற்ற பின்னர் இந்திய அணியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அல்ல. பெயருக்கு ஒருவர் பொம்மை பிரதமர். ஆனால் உண்மையில் ஆட்சி அதிகாரம் அனைத்தும் அவரிடம் இல்லை. ஆட்சி செய்தது சோனியா & குரூப் தான். இதுதான் கான் கிராஸ் கலாச்சாரம்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்ற பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளத்தில் பகிரப்படும் பதிவு

ட்ரெண்டிங் செய்திகள்

 

உண்மை அறிவோம்:

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு இந்தியாவை ஆட்சி செய்த போது அவருக்கு அதிகாரமே இல்லை என்பது போலவும், உலகக் கோப்பையை வென்ற அணியினருடன் கூட பிரதமரால் புகைப்படம் எடுத்துக்கொள்ள முடியவில்லை என்பது போலவும் பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது இந்தியா இரண்டு உலகக் கோப்பையை வென்றது. அந்த அதிர்ஷ்டம் மோடிக்கு இல்லை என்பது போன்று கடந்த காலங்களில் இந்திய அணியை மன்மோகன் சிங் சந்தித்த புகைப்படத்தை வைத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தனர். அப்படி இருக்கும் போது மன்மோகன் சிங்கை இந்திய கிரிக்கெட் அணி சந்திக்கவில்லை என்பது தவறான தகவல் போல் தெரிந்தது.

எனவே, மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களை சந்தித்தாரா இல்லையா என்று மட்டும் ஆய்வு செய்தோம்.

இந்த புகைப்படத்தில் gettyimages என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, அந்த இணையதளத்திற்குச் சென்று புகைப்படத்தைப் பார்த்தோம். இந்திய கிரிக்கெட் அணியை காங்கிரஸ் தலைவர் சோனியா 30 அக்டோபர் 2007ம் ஆண்டு சந்தித்தபோது எடுக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதிலேயே பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை சந்தித்த கிரிக்கெட் அணி என்று டைப் செய்து தேடினோம். அப்போது 2007ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி (சோனியா காந்தியை சந்தித்த அதே நாள்) பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை சந்தித்த கிரிக்கெட் அணியினர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்ததாகக் கூகுளில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வென்ற அணியை சந்தித்த அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் என்று கூகுளில் ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினோம். அப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் 2007ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி வெளியான செய்தி நமக்குக் கிடைத்தது. அதில் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியை சந்தித்த பிரதமர் மன்மோகன் சிங் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

புகைப்படங்களாக கிடைக்கிறதா என்று தேடிய போது பிரதமர் அலுவலக இணையதளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று நமக்கு கிடைத்தது. அதில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய அணியை பிரதமர் சந்தித்தார் என்று இருந்தது. மேலும் இந்திய கிரிக்கெட் அணியினருடன் மன்மோகன் சிங் எடுத்துக்கொண்ட புகைப்படமும் அதில் இருந்த்து.

இதன் மூலம் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினர் பிரதமரைச் சந்தித்திருப்பதும் உறுதியாகிறது. மேலும் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியும் பிரதமரை சந்திக்காமல் சோனியா காந்தியையே சந்திக்கும் வழக்கம் கொண்டிருந்தனர் என்ற தகவலும் தவறானது என்று உறுதி செய்யப்படுகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியினர் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை சந்திக்கவில்லை என்று பரவும் தகவல் தவறானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. 

பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்தி முதலில் tamil.factcrescendo.com இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.