இப்போ என்ன செய்வீங்க.. திருந்தாத திக்வேஷ் ரதி! புல்தரையில் எழுதி கொண்டாட்டம்.. பிசிசிஐ தடையில் இருந்து எஸ்கேப்
Digvesh Rathi: இரண்டு தகுதி இழப்பு புள்ளிகள், இரண்டு முறை அபராதம், பிசிசிஐ எச்சரித்த நிலையிலும் விக்கெட் வீழ்த்திய பிறகு தனது நோட் புக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் லக்னோ வீரர் திக்வேஷ் ரதி. இந்த முறை வழக்கமான கொண்டாட்டத்தை சற்று வித்தியாசமாக வெளிப்படுத்தி தடையில் இருந்து தப்பித்துள்ளார்.
ஐபிஎல் 2025 தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஸ்பின் பந்து வீச்சாளரான திக்வேஷ் ரதி, தனது அற்புதமான ஆட்டத்தால் மட்டுமல்லாமல், தனது அச்சமற்ற அணுகுமுறையாலும் புயலை கிளப்பி வருகிறார். ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரு அணிகளும் நெருப்பு மாதிரி விளையாடினர். பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்ற இந்த ஆட்டத்தில் லக்னோ 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த சீசனில் ஹாட்ரிக் வெற்றியை பெற்று, புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியது.
லக்னோ அணியின் ஸ்டிரைக் பவுலர்
டெல்லி பிரீமியர் லீக்கின் (DPL) தொடக்கப் போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தால் கவனம் ஈர்த்த திக்வேஷ் ரதி, கடந்த டிசம்பரில் நடந்த ஏலத்தில் அடிப்படை விலையான ரூ. 30 லட்சத்துக்கு லக்னோ அணியினரால் வாங்கப்பட்டார். இதையடுத்து இந்த சீசனில் லக்னோ அணியின் சிறந்த பந்து வீச்சாளராக உருவெடுத்திருக்கும் திக்வேஷ் ரதி, இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 7.75 என்ற எகானமியுடன், 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அந்த வகையில் லக்னோ அணியின் ஸ்டிரைக் பவுலர்களில் ஒருவராக திகழ்கிறார்.