‘நாங்கள் டபிள்யூ.பி.எல் இறுதிப் போட்டிக்கு தயாராக இருக்கிறோம்’: டெல்லி துணை கேப்டன் ஜெமிமா பேட்டி
கடந்த ஆறு நாட்களில் டெல்லி அணிக்கு நல்ல பயிற்சி அமர்வுகள் இருந்ததாகவும், அது தனது அணியை நல்ல நிலையில் வைக்கும் என்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூறினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ், கடந்த லீக் போட்டிக்கும் மகளிர் பிரீமியர் லீக் இறுதிப் போட்டிக்கும் இடையிலான நீண்ட இடைவெளி அணிக்கு புத்துயிர் அளித்துள்ளது என்று வலியுறுத்தினார்.
மார்ச் 11 அன்று மும்பையில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை இந்தியன்ஸை தோற்கடித்த பின்னர் கேபிடல்ஸ் தொடர்ந்து மூன்றாவது முறையாக டபிள்யூபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
மார்ச் 7 ஆம் தேதி குஜராத் ஜெயண்ட்ஸுக்கு எதிரான தோல்வியுடன் கேபிடல்ஸ் தனது லீக் போட்டிகளை முடித்தது. எனவே, முதலிடத்தை பிடிக்கும் அணியை தீர்மானிக்க ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி வரை அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதில், மும்பை இந்தியன்ஸ் தோற்றதை தொடர்ந்து, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த டெல்லி, நேரடியாக ஃபைனலுக்கு முன்னேறியது.
