தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Lsg Vs Dc Preview: பேட்டிங்,பவுலிங் என பக்கா அணியாக மிரட்டும் லக்னோ! மூன்று முறை தோல்வி - இந்த முறை தப்பிக்குமா டெல்லி?

LSG vs DC Preview: பேட்டிங்,பவுலிங் என பக்கா அணியாக மிரட்டும் லக்னோ! மூன்று முறை தோல்வி - இந்த முறை தப்பிக்குமா டெல்லி?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 12, 2024 06:45 AM IST

இதுவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்திருக்கும் டெல்லி கேபிடல்ஸ், இந்த முறை அந்த அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்யுமா என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இன்று மோதல்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இன்று மோதல்

ட்ரெண்டிங் செய்திகள்

பக்கா அணியாக மாறியிருக்கும் லக்னோ

இந்த சீசனை தோல்வியுடன் தொடங்கிய லக்னோ, அடுத்தடுத்து மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது. ஆரம்பத்தில் அந்த அணியின் பேட்டிங் வரிசை வலுவாக இருந்த நிலையில், பவுலிங்கில் அனுபவ இல்லாமை இருந்தது. ஆனால் இளம் வீரர்களான மயங்க் யாதவ் அசுர வேகம், யாஷ் தாக்கூர் துல்லிய பவுலிங் அணியின் வெற்றிக்கு அடுத்தடுத்த போட்டிகளில் கைகொடுத்தது.

அதேபோல் ஸ்பின்னர்களான ரவி பிஷ்னோய் சித்தார்த், க்ருணால் பாண்ட்யா ஆகியோரும் ஸ்பின் பவுலிங்கில் ஜொலித்து, குஜராத்துக்கு எதிரான கடந்த போட்டியில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்கள். எனவே தற்போது பேட்டிங்குடன், அனுபவ வீரர்கள் இல்லாவிட்டாலும் பவுலிங்கிலும் நன்றாக செட்டாகியிருக்கும் அணியாக லக்னோ உள்ளது.

டெல்லி அணியின் தடுமாற்றம்

பவுலிங்கில் சிறப்பாக செயல்படும் டெல்லி பேட்டிங்கில் தடுமாறி வரும் அணியாக இருந்து வருகிறது. வார்னர், ப்ருத்விஷா, ரிஷப் பண்ட் போன்றோர் இருந்தும் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை வெளிப்படுத்த முடியாமல் அணி தவித்து வருகிறது.

மிடில் ஆர்டரில் ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் நல்ல பார்மில் இருந்து வருகிறார். ஸ்பின் பந்து வீச்சை எந்த பயமும் இல்லாமல் எதிர்கொண்டு ரன்குவித்து வருகிறார். எனவே இன்றைய போட்டியில் இவரது ஆட்டம் முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும்.

அதேபோல் முக்கிய வீரர்கள் குல்தீப் யாதவ், மிட்செல் மார்ஷ் ஆகியோர் காயமடைந்திருப்பது பாதகமான விஷயமாக உள்ளது. தொடர் தோல்வியுடன் நெருக்கடியான சூழலில் லக்னோவுக்கு எதிராக இந்த முறை முதல் வெற்றியை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த போட்டியில் தோல்வியை தழுவினால் அடுத்த விளையாடப்போகும் போட்டிகளில் தொடர் வெற்றி பெற்றாக வேண்டிய நிலை டெல்லிக்கு உள்ளது. அந்த வகையில் பார்த்தால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக இன்றைய ஆட்டம் உள்ளது.

பிட்ச் நிலைவரம்

லக்னோ ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு சவால் மிக்கதாகவே அமைந்திருக்கும். சிவப்பு மணல், கருப்பு மணல் என இரு வேறு பிட்ச்கள் இங்கு இருக்கின்றன. இதில் கருப்பு மணல் பிட்சில் இன்றைய போட்டி நடக்கும் என தெரிகிறது. ஸ்பன்னர்களுக்கு சாதகமாக இந்த ஆடுகளம் செயல்படும் எனவும் பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதில் அதிக சிரமத்தை பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

பகல் நேரத்தில் 40 டிகிரி வரை இருக்கும் வெப்பநிலை இரவில் 24 வரை குறையக்கூடும். மழை்கான வாய்ப்பு இல்லை எனவும், 28 சதவீதம் வரை ஈரப்பதம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் இதுவரை

இந்த இரு அணிகளும் மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மூன்று முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்றுள்ளது. டெல்லி அணிக்கு எதிராக லக்னோ எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 195 ரன்களாகும். லக்னோவுக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் 189 ரன்கள் என உள்ளது

கடந்த சீசனில் இரு அணிகளுக்கு இடையிலான மோதலில் லக்னோ அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த போட்டியில் லக்னோ வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் 14 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point