ஐபிஎல் 2025: ருதுராஜ்க்கு மாற்றாக 17 வயது இளம் பேட்ஸ்மேன்.. கண்டுபிடித்த சிஎஸ்கே.. யார் அவர்! பின்னணி என்ன?
ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக 17 வயதான மும்பை தொடக்க வீரரை கொண்டு வர சிஎஸ்கே முடிவு செய்துள்ளது. அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது அணி தேர்வில் இடம்பெறுவார் எனவும் கூறப்படுகிறது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான சிஎஸ்கே விளையாட இருக்கும் போட்டிக்கு ஆயுஷ் மத்ரே லக்னோவுக்குச் செல்ல போதுமான நேரம் இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 20 ஆம் தேதி வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் அவர் அணியினருடன் இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ருதுராஜ் கெய்க்வாடுக்கு மாற்று
"ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்று வீரராக ஆயுஷ் மத்ரே அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அணியுடன் இணையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். ஏப்ரல் 20ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கான தேர்வில் இருப்பார்" என தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, சிஎஸ்கே நிர்வாகம் மத்ரேவை சோதனைகளுக்காக சென்னை செல்லுமாறு கேட்டுக் கொண்டது. அப்போது அவர் அணியின் நிர்வாகத்தினரை வெகுவாக கவர்ந்துள்ளாராம். எனவே, அவர் மாற்று வீரராக உறுதி செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: காயத்தால் ருதுராஜ் விலகல்.. மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆன தோனி
ஆயுஷ் மத்ரே, 9 முதல் தர போட்டிகளில் விளையாடி 504 ரன்கள் எடுத்துள்ளார், இதில் இரண்டு அரை சதங்கள் அடங்கும். 7 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள் உட்பட 458 ரன்கள் எடுத்துள்ளார். அவர் அக்டோபர் 2024இல் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார்.
சிஎஸ்கே தடுமாற்றம்
ஐபிஎல் 2025 சீசனில் தடுமாற்றம் கண்டு வரும் அணியாக 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இருந்து வருகிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டும் பெற்றிருக்கும் சிஎஸ்கே புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இனி விளையாட இருக்கும் ஒவ்வொரு போட்டியும் சிஎஸ்கேவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் கடந்த போட்டிக்கு முன்பு சிஎஸ்கேவின் கேப்டன் ருதுராஜ் கெயக்வாட், முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2025 தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதையடுத்து சிஎஸ்கே அணியின் எஞ்சிய போட்டிக்கு எம்எஸ் தோனி கேப்டன்சி செய்வார் என அறிவிக்கப்பட்டது.
மேலும் படிக்க: இப்போதைக்கு இல்லை.. ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி
இதைத்தொடர்ந்து மீண்டும் தோனி கேப்டன்சியில் சிஎஸ்கே அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு தோல்வியை தழுவியது. இதையடுத்து சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி லக்னோ ஏகானா மைதானத்தில் இன்று (ஏப்ரல் 14) நடைபெறுகிறது. சிஎஸ்கே அணியை பொறுத்தவரை இந்த போட்டி கட்டாய வெற்றி போட்டியாக மட்டுமல்லாமல், கம்பேக் கொடுக்க வேண்டிய போட்டியாகவும் அமைந்துள்ளது.
முந்தைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக உள்ளூர் மைதானமான சேப்பாகத்தில் 103 ரன்கள் என மிகவும் குறைவான ஸ்கோரை எடுத்தது சிஎஸ்கே. அணியின் டெஸ்ட் இன்னிங்ஸ் போன்ற பேட்டிங் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
"பவர் மற்றும் சிக்ஸ் அடிப்பதில் ஈர்ப்பு இல்லாமல் இருக்கிறோம். விளையாட்டின் அழகு என்னவென்றால், பேட்டுக்கும் பந்துக்கும் இடையில் இன்னும் சமநிலை உள்ளது. சூழ்நிலைகள் ஒரு பெரிய பங்கை வகிக்கின்றன. ஆனால் திறனை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. சமநிலை நீடிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்," என்று போட்டிக்கு பின்னர் சிஎஸ்கே அணி பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறினார்.
