IND vs AUS: ‘பெர்த் சத்தத்தை நிறுத்திய இந்திய ஓப்பனர்ஸ்’ ஜெய்ஸ்வால்-ராகுல் ஆட்டத்தில் ஆட்டம் கண்ட ஆஸி!
பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 57 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. விக்கெட் எடுக்க முடியாமல் ஆஸி., வீரர்கள் திணறினர்.

பெர்த்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய பந்துவீச்சாளர்களின் அற்புதமான செயல்திறனுக்குப் பிறகு, இந்திய தொடக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் இரண்டாவது இன்னிங்ஸில் அணிக்கு நிலையான தொடக்கத்தை அளித்தனர்.
நிலைத்து நின்ற இந்திய தொடக்கவீரர்கள்
கே.எல்.ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் தங்கள் தனிப்பட்ட அரைசதத்தை பூர்த்தி செய்து தற்போது கிரீஸில் உள்ளனர். பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 57 ஓவர்களில் 172 ரன்கள் எடுத்து 218 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய அணி இதுவரை ஒரு விக்கெட் கூட இழக்காதது நல்ல செய்தி.
கே.எல்.ராகுல் 153 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் குவித்துள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 193 பந்துகளில் 7 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உட்பட 90 ரன்கள் குவித்தார். இந்திய ஓப்பனர்களை ஆட்டமிழக்க முடியாமல் ஆஸி., பவுலர்கள் திணறினர். மும்பையில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம் என்று ஆஸி., கேப்டன் கம்மின்ஸ் கூறி, அதன் படி ஆஸி., வெற்றியும் பெற்றது. அந்த சம்பவத்திற்கு பதிலடி தரும் விதமாக, இந்திய ஓப்பனர்கள் இன்று பெர்த் மைதானத்தில் இருந்த ஆஸி., ரசிகர்களை அமைதியாக்கினர். அவர்களை சோர்வடை செய்தனர். அவர்களை விட ஆஸி., வீரர்கள் இன்னும் சோர்வடைந்தனர்.
