ஐபிஎல் 2025: நோட்ஸ் எழுதி பஞ்சாப் பேட்ஸ்மேனை வழியனுப்பிய லக்னோ பவுலர்.. அபராதத்துடன் குட்டு வைத்த பிசிசிஐ
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  ஐபிஎல் 2025: நோட்ஸ் எழுதி பஞ்சாப் பேட்ஸ்மேனை வழியனுப்பிய லக்னோ பவுலர்.. அபராதத்துடன் குட்டு வைத்த பிசிசிஐ

ஐபிஎல் 2025: நோட்ஸ் எழுதி பஞ்சாப் பேட்ஸ்மேனை வழியனுப்பிய லக்னோ பவுலர்.. அபராதத்துடன் குட்டு வைத்த பிசிசிஐ

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Updated Apr 02, 2025 02:40 PM IST

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஸ்பின்னரான திக்வேஷுக்கு, பஞ்சாப் கிங்ஸ் பேட்ஸ்மேன் பிரியான்ஷ் ஆர்யாவை ஆட்டமிழக்கச் செய்த பிறகு, அனிமேஷன் நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அவரது இந்த செயலுக்கு போட்டிக் கட்டணத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டதுடன் ஒரு தகுதி இழப்பு புள்ளியும் அளிக்கப்பட்டுள்ளது.

நோட்ஸ் எழுதி பஞ்சாப் பேட்ஸ்மேனை வழியனுப்பிய லக்னோ பவுலர்.. அபராதத்துடன் குட்டு வைத்த பிசிசிஐ
நோட்ஸ் எழுதி பஞ்சாப் பேட்ஸ்மேனை வழியனுப்பிய லக்னோ பவுலர்.. அபராதத்துடன் குட்டு வைத்த பிசிசிஐ (IPL)

அந்த வகையில் ஐபிஎல் 2025 சீசனில், ஸ்லெட்ஜிங் சர்ச்சையில் சிக்கி அபராதம் மற்றும் தகுதி இழப்பு புள்ளிகளை பெறும் முதல் வீரர் ஆகியுள்ளார் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஸ்பின் பவுலரான திக்வேஷ் சிங் ரதி. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி மீது பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது.

லக்னோ பவுலருக்கு அபராதம்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யாவை ஆட்டமிழக்க செய்த பிறகு, களத்தை விட்டு வெளியேறிய அவர் அருகே சென்று அனிமேஷன் நோட்புக் கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய திக்வேஷ் சிங் ரதிக்கு போட்டிக் கட்டணத்தில் 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும் அளிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் நடத்த விதி, பிரிவு 2.5 இன் கீழ் திக்வேஷ் சிங் ரதி, லெவல் 1 குற்றத்தை ஒப்புக்கொண்டார் மற்றும் மேட்ச் ரெஃப்ரியின் அனுமதியை ஏற்றுக்கொண்டார். அவரது செயல் லெவல் 1 விதி மீறல்களாகும்

திக்வேஷ் செய்த தவறு என்ன?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விதித்த 172 ரன்கள் இலக்கை சேஸ் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில் இந்த சம்பவம் நடந்தது. ஸ்டிரைக்கில் இருந்த பஞ்சாப் பேட்ஸ்மேன் ஆர்யாவுக்கு ஷார்ட் அண்ட் வைட் பந்து வீசினார் லக்னோ பவுலர் திக்வேஷ். இடது கை வீரரான ஆர்யா, அதிக கால் அசைவு இல்லாமல் புல் ஷாட் முயற்சித்தார். ஆனால் பந்து டாப்-எட்ஜ் ஆக, ஷர்துல் தாக்கூர் ஓடி வந்து சிறப்பான கேட்ச் பிடித்தார்.

ஆர்யா 9 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து பெவிலியன் நோக்கி திரும்பிச் சென்றபோது, ​​டெல்லி டி20 லீக்கில் அவருடன் விளையாடிய சக வீரரான திக்வேஷ் அருகில் வந்து ஒரு கற்பனை நோட்புக்கில் எழுதுவது போல் செய்கை வெளிப்படுத்தினார். அப்போது களநடுவர்கள் அதைக் கவனித்து, திக்வேஷிடம் சில வார்த்தைகள் பரிமாறினர்.

கோலி கற்பித்த பாடம்

இதற்கிடையே திக்வேஷின் இந்தக் கொண்டாட்டம் வெஸ்ட் இண்டீஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் கெஸ்ரிக் வில்லியம்ஸை நினைவூட்டியது, அவர் எதிரணி பேட்ஸ்மேன்களை அவுட் செய்த பிறகு அதை கொண்டாட இதைபோல் நோட்ஸ் எழுதி கையெப்பம் இடுவது போல் செய்வார்.

அப்படிதான் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய கேப்டன் விராட் கோலியை அவுட் செய்த பிறகு வில்லியம்ஸ் நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் அடுத்த போட்டியிலேயே தனது சிறப்பான பேட்டிங் மூலம் தக்க பதிலடி கொடுத்த கோலி, அவரை போல் நோட்ஸ் எழுதி காண்பித்தி பாடம் கற்பித்தார்.

கவனத்தை பெற முயற்சி

திக்வேஷின் கொண்டாட்டம் குறித்து ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவிக்கையில், "முந்தைய பந்தில் ஒரு பவுண்டரி அல்லது சிக்ஸர் அடித்த பிறகு விக்கெட் விழுந்தால் அந்த பவுலரின் கொண்டாட்டம் எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு பந்து வீச்சாளராக, உங்களுக்கு ஆறு பந்துகள் உள்ளன. எனவே நீங்கள் ஐந்து டாட் பந்துகளை எடுத்து ஆறாவது பந்தில் விக்கெட் எடுக்கும் போது இப்படி ஏதாவது செய்வது ஏன் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் இந்த சைகைகள் அனைத்தும் நீங்கள் விக்கெட் எடுக்க எதிர்பார்க்கவில்லை என்பதை குறிக்கிறது. இப்போது நீங்கள் ஒரு விக்கெட் எடுத்த பிறகு, கவனத்தை பெற முயற்சிக்கிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும்" என்று அவர் வர்ணனை செய்தபோது கூறினார்.

இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தோற்கடித்தது. லக்னோ பவுலர்களில் திக்வேஷ் மட்டும் சிறப்பாக பவுலிங் செய்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றிக்கு பிறகு பஞ்சாப் விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 போட்டிகளில், ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 6வது இடத்துக்கு சென்றது