BCCI: இனி யாராக இருந்தாலும் இந்த 10 கட்டளைகள் கட்டாயம்.. இந்திய அணி வீரர்களுக்கு பிசிசிஐ வைத்த செக் - என்ன தெரியுமா?
BCCI: தொடர் தோல்விகளில் இருந்து அணியை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான 10 கட்டளைகள் அடங்கிய கொள்கைகளை பிசிசிஐ தயாரித்துள்ளது. வரும் காலங்களில் இந்திய வீரர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக உள்ளூர் தொடரில் தோல்வி, அதன் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தோல்விக்கு பிறகு இந்திய அணி நிர்வாகம் சார்பில் மறுஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அணி வீரர்களுக்கு 10 கட்டளைகள் அடங்கிய கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளது. 'ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் நேர்மறையான சூழலை மேம்படுத்துவதற்கான' முயற்சியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் சென்ற இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. தோல்வி ஒரு புறம் இருக்க களத்துக்கு வெளியே அணி வீரர்கள் பற்றி சில சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. சில வீரர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தனியாகப் பயணம் செய்வது, இளம் வீரர்கள் மைதானத்துக்கு வெளியே தன்னிச்சையாக செயல்படுவது என அணி ஒழுக்கம் ஆபத்தான சூழ்நிலைக்கு மாறியதாக பிசிசிஐ மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்திய அணி வீரர்கள் பின்பற்ற கொள்கைகள் உருவாக்கம்
சாம்பியன்ஸ் டிராபி தொடர் நெருங்கி வரும் நிலையில், அணியின் ஒழுக்கத்தை மீட்டெடுத்து, மீண்டும் ஒன்றிணைந்து உத்தி வகுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.