BAN vs SL: வங்கதேசம் டாஸ் வென்று ஃபீல்டிங் தேர்வு-யாருக்கு வெற்றி வாய்ப்பு
WorldCup Cricket 2023: இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
உலகக் கோப்பை தொடரின் 38வது போட்டி வங்கதேசம் - இலங்கை அணிகளுக்கு இடையே டெல்லியில் நடைபெறுகிறது. பகலிரவு ஆட்டமாக அருண் ஜெட்லி மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.
1.30 மணிக்கு டாஸ் போடப்பட்டது. வங்கதேசம் டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது.
உலகக் கோப்பை நாக்அவுட் வாய்ப்பு பரிபோனாலும் சாம்பியன்ஸ் டிராபிக்கான வாய்ப்பை தக்க வைக்கும் முயற்சியில் வங்கதேசம் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விளையாடிய 7 போட்டிகளில் ஒரு வெற்றி, 6 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் இருக்கும் வங்கதேசம் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது. இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
வங்கதேசம் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. மோசமான பவுலிங், பீல்டிங் காரணமாகவே அந்த அணி தோல்விகளை சந்திக்க நேர்ந்தது. எனவே அதை சரி செய்வதற்கான போட்டியாக இன்றைய ஆட்டம் அமைகிறது.
கிட்டத்தட்ட ஒரு வார இடைவெளிக்கு பிறகு களமிறங்கும் வங்கதேசம், சாம்பியனஸ் டிராபி தொடருக்கான தகுதியை மனதில் வைத்து விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இலங்கை அணியை பொறுத்தவரை ஆரம்பத்தில் ஹாட்ரிக் தோல்வி பின்னர் இரண்டு வெற்றி, அதன் பிறகு மறுபடியும் இரண்டு தோல்விகளை பெற்று விளையாடி 7 போட்டிகளில் 2 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
இலங்கை அணிக்கு இன்னும் அரையிறுதிக்கான குறைந்தபட்ச வாய்ப்பு என்பது இருக்கிறது. அதாவது இனி மிகப் பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் வெற்றி, மற்ற அணிகளின் போட்டி முடிவுகளை பொறுத்து நூலளவு வாய்ப்பை கொண்டுள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடருக்கு முன்னரே முக்கிய வீரர்களின் காயம் இலங்கை அணிக்கு பெரும் தலைவலியாகவே இருந்தது. இந்த சூழ்நிலையில் உலகக் கோப்பை போட்டிகளில் தெளிவாகவே அது தெரிந்ததது. பேட்டிங்கில் ஜொலித்தால் பவுலிங்கில் சொதப்பல், பவுலிங்கில் கலக்கினால் பேட்டிங்கில் சொதப்பல் என்றே உலகக் கோப்பை தொடர் முழுவதும் விளையாடி வந்துள்ளது.
வங்கதேசம் போல் இலங்கை அணிக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் தகுதி என்பது முக்கியம் என்பதால் வெற்றியை மட்டும் குறிவைத்து விளையாடும் என எதிர்பார்க்கலாம். அனுபவ வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் வருகை இலங்கை அணிக்கு பலம் சேர்த்திருப்பது போல், மற்றொரு வீரரான குசால் பெரராவும் அணிக்கு திரும்பியிருப்பதால் புத்துயிர் தரும் விஷயமாக மாறியுள்ளது.
உலகக் கோப்பை 2023 தொடரின் அதிகபட்ச ஸ்கோர் டெல்லி மைதானத்தில் தான் அடிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று நடைபெற இருக்கும் ஆடுகளமும் பேட்ஸ்மேன்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் என கணிக்க்ப்பட்டுள்ளது. இருப்பினும் டெல்லி சமீப நாள்களாக நிலவி வரும் காற்று மாசு வீரர்களும் பெரும் சவாலாக அமையும் என கூறப்டுகிறது.
உலகக் கோப்பை போட்டிகளில் வங்கதேசம் - இலங்கை அணிகள் இதுவரை 4 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இலங்கை 3 முறை வெற்றியும், ஒரு போட்டி முடிவில்லாமலும் உள்ளது. எனவே இலங்கையை முதல் முறையாக உலகக் கோப்பை போட்டியில் வீழ்த்துவதற்கான முயற்சியில் வங்கதேசம் ஈடுபடும் என எதிர்பார்க்கலாம்.
டாபிக்ஸ்