IND vs AUS 2nd T20: தோல்விக்குக் காரணம் என்ன?-ஆஸி., பயிற்சியாளர் பதில்
தமிழ் செய்திகள்  /  கிரிக்கெட்  /  Ind Vs Aus 2nd T20: தோல்விக்குக் காரணம் என்ன?-ஆஸி., பயிற்சியாளர் பதில்

IND vs AUS 2nd T20: தோல்விக்குக் காரணம் என்ன?-ஆஸி., பயிற்சியாளர் பதில்

Manigandan K T HT Tamil
Nov 27, 2023 10:15 AM IST

Cricket Australia: ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் 45 ரன்கள் விளாசினார். கேப்டன் மாத்யூ வேட் 42 ரன்கள் பதிவு செய்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர்.

ஆஸ்திரேலிய கோச் ஆண்ட்ரே
ஆஸ்திரேலிய கோச் ஆண்ட்ரே

ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் ஜெயித்தது.

இதைத் தொடர்ந்து நேற்றிரவு திருவனந்தபுரத்தில் 2வது டி20 ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பவுலிங்கைத் தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்தது இந்திய அணி.

யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் அரை சதங்களை விளாசினர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை எடுத்தது இந்தியா.

இதையடுத்து, 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா சேஸிங் செய்தது. ஆனால், அந்த அணியால் 191 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 191 ரன்களில் சரணடைந்தது ஆஸி.

இந்திய பவுலர்கள் பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்ணோய் ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் 45 ரன்கள் விளாசினார். கேப்டன் மாத்யூ வேட் 42 ரன்கள் பதிவு செய்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். பந்துவீச்சிலும் ஆஸ்திரேலிய அணி பெரிதாக ஜொலிக்கவில்லை.

இந்நிலையில், ஆட்டம் முடிந்த பிறகு ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஆண்ட்ரே போரோவெக், கூறியதாவது:

பந்துவீச்சைப் பொறுத்தவரை இந்திய அணி சிறப்பாகவும் நேர்த்தியாகவும் செயல்பட்டது. முதல் ஆறு ஓவர்களில் எங்களால் பெரிய அளவில் ஸ்கோர் பதிவு செய்ய முடியவில்லை. இந்த நிலைமையில் திட்டங்களும் நோக்கமும் தேவை, நாங்கள் சரியான முடிவுகளை எடுக்கிறோம், ஆனால் சரியான தருணங்களில் அதை செயல்படுத்தவில்லை. இதுவே தோல்விக்குக் காரணமாக நினைக்கிறேன் என்றார் போரோவெக்.

ஆட்டத்திற்கு பிந்தைய சந்திப்பு கூட்டத்திற்கு ஆஸி., கேப்டன் மேத்யூ வேட் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

சமீபத்திய கிரிக்கெட் செய்திகள், கிரிக்கெட் அணி குறித்த தகவல்கள், லைவ் ஸ்கோர் மேட்ச் புதுப்பிப்புகள், டி20 கிரிக்கெட் ஆகியவற்றை கீழேயுள்ள பிரிவில் படிக்கவும்.