4484 பந்துகளுக்கு பிறகு பும்ரா ஓவரில் அடிக்கப்பட்ட சிக்ஸ்.. அறிமுக ஆட்டத்திலேயே அசத்திய 19 வயது ஆஸி., வீரர்
சாம் கான்ஸ்டாஸ் அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் சிக்ஸர் அடித்து வரலாறு படைத்தார். 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு டெஸ்டில் ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தில் சிக்ஸர் அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் ஆனார். கடைசியாக பும்ரா ஓவரில் சிக்ஸர் அடித்ததும் ஆஸி., பேட்ஸ்மேன் தான். அவர் கேமரூன் கிரீன்.

4484 பந்துகளுக்கு பிறகு பும்ரா ஓவரில் சிக்ஸர் அடித்த வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார் ஆஸி., பேட்ஸ்மேன் கான்ஸ்டாஸ். இவருக்கு வயது 19. இந்த மேட்ச்சில்தான் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். முதல் மேட்ச்சிலேயே அரை சதம் விளாசிய அவர், 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் ஆஸி., விளையாடி வருகிறது. கவாஜா, லபுசேன் ஆகியோரும் அரை சதம் விளாசி அதிரடி காண்பித்து வருகின்றனர்.
மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் பாக்சிங் டே டெஸ்டில் பேட்டிங் செய்யும் போது கான்ஸ்டாஸ் பின்வாங்கவில்லை. இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் ஒரு மணி நேர ஆட்டத்தில் 52 பந்துகளில் அரை சதத்தை அடித்தார். முதல் ஓவரிலேயே அவர் களமிறங்கினார். கான்ஸ்டாஸ் ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசி வெளியேறினார்.