Ind vs Ban 1st Test: வார்னே சாதனை சமன்..இந்தியாவுக்கு மிக பெரிய வெற்றியை பெற்று தந்த அஸ்வின்
Ind vs Ban 1st Test Result: பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்தி ரவிச்சந்திரன் அஸ்வின், ஸ்பின் லெஜெண்ட் வார்னே சாதனை சமன் செய்தார். வங்கதேசம் அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா மிக பெரிய வெற்றியை பெற்றுள்ளது.
இந்தியா சுற்றுப்பயணம் செய்திருக்கும் வங்கசேதம் 2 டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் மிக பெரிய வெற்றியை பெற்ற தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா நிர்ணயித்த 515 என்ற இமாலய இலக்கை சேஸ் செய்த வங்கதேசம் அணி, நான்காம் நாள் ஆட்டமான இன்று இரண்டாவது இன்னிங்ஸில் 234 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது.
அஸ்வினின் அபார பந்து வீச்சால் வங்கதேசம் அணியின் பேட்டிங் வரிசை சரிந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 88 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் அஸ்வின்.
அஸ்வின் சாதனை
இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்ததன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 37வது முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மறைந்த முன்னாள் லெஜண்ட் பவுலர் ஷேன் வார்னே சாதனையை சமன் செய்துள்ளார். தனது 101வது டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இதை நிகழ்த்தியுள்ளார்.
அத்துடன் நியூசிலாந்து அணியின் ஸ்பின்னர் ரிச்சார்ட் ஹாட்லீ 36 முறை 5 விக்கெட்டுகள் எடுத்த சாதனையையும் முறியடித்துள்ளார்.
தற்போது அஸ்வின், இலங்கையை சேர்ந்த ஜாம்பவான் ஸ்பின்னரான முத்தையா முரளிதரனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். முத்தையா முரளிதரன் சாதனையை முறியடிக்க அஸ்வினுக்கு இன்னும் 30 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள்
- முத்தையா முரளிதரன் (இலங்கை) - 67 முறை
- ரவிச்சந்திரன் அஸ்வின் (இந்தியா) - 37 முறை
- ஷேன் வார்னே (ஆஸ்திரேலியா) - 37 முறை
- ரிச்சாட்டு ஹாட்லீ (நியூசிலாந்து) - 36 முறை
- அனில் கும்ப்ளே (இந்தியா) - 35 முறை
இந்தியா vs வங்கதேசம் போட்டி சுருக்கம்
இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் நஜுமல் ஹுசைன் ஷாண்டோ பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 113, ரவீந்திர ஜடேஜா 86 ரன்கள் எடுத்தனர். வங்கதேச பவுலர்களில் ஹசன் முகமத் 5, தஸ்கிந் அகமது 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடர்ந்த வங்கதேசம் 149 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இந்திய பவுலர்களில் பும்ரா 4, சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
227 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. ஷுப்மன் கில் 119, ரிஷப் பண்ட் 109 ரன்கள் எடுத்தனர். பின்னர் 515 ரன்கள் என மிக பெரிய இலக்கை சேஸ் செய்த வங்கதேசம் 62.1 ஓவரில் 234 ரன்களுக்கு ஆல்அவுட்டாகியுள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் 6, ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
ஆல்ரவுண்டராக ஜொலித்த அஸ்வின்
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்த டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய நிலையில் 144 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது அஸ்வின் - ஜடேஜா ஆகியோர் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்து 199 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
சதமடித்த அஸ்வின் 133 பந்துகளில் 113 ரன்கள் அடித்தார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்திருக்கும் 6வது சதமாகும். முதல் இன்னிங்ஸில் பவுலிங்கில் விக்கெட்டுகள் எதுவும் எடுக்காத போதிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு பவுலிங்கிலும் பங்களிப்பு அளித்தார் அஸ்வின். இதன் மூலம் இந்த போட்டியில் அவர் சிறந்த ஆல்ரவுண்டராக ஜொலித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு அளித்துள்ளார்.
டாபிக்ஸ்