Ind vs SL: இரண்டு வீரர்கள் அடுத்தடுத்து விலகல்..! இலங்கை அணிக்கு ஏற்பட்ட பின்னடைவு
இந்தியாவுக்கு எதிரான தொடர் தொடங்கும் முன்னரே காயம் காரணமாக இரண்டு வீரர்கள் இலங்கை அணியில் இருந்து விலகியுள்ளனர். இதனால் அந்த அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்தியா மூன்று போட்டிகள் கொண்ட டி20, மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. முதலில் டி20 தொடர் ஜூலை 27ஆம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து போட்டி தொடங்குவதற்கு முன் இரண்டு முக்கிய வீரர்கள் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
இடது கட்டை விரலில் காயம்
இந்தியாவுக்கு எதிரான போட்டிக்காக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் நுவான் துஷாரா உள்பட அணி வீரர்கள் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது பீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டபோது துஷாரா இடது கை கட்டை விரலில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்கான் செய்து பார்த்தபோது அவரது கட்டை விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக மருத்துவ அறிக்கை வெளியானது.
இதனால் அவர் இந்தியாவுக்கு எதிரான இலங்கை டி20 அணியிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக தில்ஷான் மதுஷங்கா சேர்க்கப்பட்டுள்ளார்.
துஷ்மந்தா சமீராவும் விலகல்
முன்னதாக, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சுவாச நோய்த்தொற்று காரணமாக சமீரா நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக வேகப்பந்து வீச்சாளர் அசித்தா பெர்ணாண்டோ சேர்க்கப்பட்டார். தற்போது மற்றொரு முக்கிய வீரரும் காயத்தால் விலகியிருப்பதால் இலங்கை அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் புதிய பயிற்சியாளர்
இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் பொறுப்பேற்றுள்ளார். அதன் பின்னர் இந்தியா விளையாடும் முதல் தொடராக இது அமைகிறது. இதேபோல் இலங்கை அணியிலும் புதிய இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் வீரர் சனத் ஜெய்சூர்யா நியமிக்கப்பட்டுள்ளார். எனவே இரு அணிகளும் புதிய பயிற்சியாளர் தலைமையில் களமிறங்க இருக்கின்றன.
இந்தியா - இலங்கை டி20 போட்டிகளில் இதுவரை
இந்தியா - இலங்கை இடையிலான டி20 போட்டிகள் ஜூலை 27, 28, 30 ஆகிய தேதிகளில் பல்லேகலே மைதானத்தில் நடைபெறுகிறது. இதுவரை இவ்விரு அணிகளும் 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்தியா 19, இலங்கை 9 முறை வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி முடிவு கிடைக்கவில்லை.
இலங்கை மண்ணில் இதுவரை 8 டி20 போட்டிகளில் இந்தியா விளையாடியுள்ளது. இதில் 5 வெற்றிகளை பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
கடைசியாக 2021இல் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணியும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணியும் வென்றிருந்தன.
தற்போது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மீண்டும் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.
இந்த தொடரில் களமிறங்கும் இரு அணிகளின் விவரம்
இந்தியா T20I அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ரியான் பிராக், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், கலீல் அகமது, அர்ஷ்தீப் ஷிங், முகமது சிராஜ், ரவி பிஷ்னோய்
இலங்கை T20I அணி: சரித் அசலங்கா (கேப்டன்), பதும் நிஸ்ஸங்க, குசல் ஜனித் பெரேரா (விக்கெட் கீப்பர்), அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), தினேஷ் சந்திமால், கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷண, மஹீஷ் தீக்ஸ் , மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க, அசித்த பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்