தமிழ் செய்திகள்  /  மட்டைப்பந்து  /  Afg Vs Nz Result: அடுத்த அப்செட்! நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை வாரி சுருட்டிய ஆப்கானிஸ்தான் பவுலர்கள் - வரலாற்று வெற்றி

AFG vs NZ Result: அடுத்த அப்செட்! நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை வாரி சுருட்டிய ஆப்கானிஸ்தான் பவுலர்கள் - வரலாற்று வெற்றி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Jun 08, 2024 04:55 PM IST

நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை வாரி சுருட்டிய ஆப்கானிஸ்தான் பவுலர்கள் 75 ரன்களில் ஆல்அவுட்டாக்கினர். இந்த உலகக் கோப்பை தொடரில் இது அடுத்த அப்செட் ஆகியுள்ளது. தற்போது ஆப்கானிஸ்தான் வீரர்கள் அதிக விக்கெட், அதிக ரன்கள் எடுத்தவர்களில் டாப் இடத்தில் உள்ளார்கள்.

நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை வாரி சுருட்டிய ஆப்கானிஸ்தான் பவுலர்கள்
நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை வாரி சுருட்டிய ஆப்கானிஸ்தான் பவுலர்கள் (PTI)

ட்ரெண்டிங் செய்திகள்

ஆப்கானிஸ்தான் ரன் குவிப்பு

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஹ்மனுல்லா குர்பாஸ் 80, இப்ராஹிம் ஜத்ரன் 44, அஸ்மதுல்ல உமர்சாய் 22 ரன்கள் அடித்தனர்.

நியூசிலாந்து பவுலர்களில் ட்ரெண்ட் போல்ட், மேட் ஹென்றி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். லாக்கி பெர்குசன் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

நியூசிலாந்து சேஸிங்

160 ரன்கள் இலக்கை சேஸ் செய்த நியூசிலாந்து அணி, 15.2 ஓவரில் 75 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால் 84 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி மிக பெரிய வெற்றியை பெற்றது.

நியூசிலாந்து அணியில் கிளென் பிளிப்ஸ் 18, மேட் ஹென்றி 12 ரன்கள் அடித்தனர். மற்றவர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். பின் அலென், மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோர் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தனர்.

ஆப்கானிஸ்தான் பவுலர்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஃபசல்ஹக் ஃபரூக்கி, ரஷித் கான் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். முகமது நபி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியால் ஆப்கானிஸ்தான் அணி குரூப் சி பிரிவில் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றியை பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

ரஹ்மனுல்லா குர்பாஸ் - இப்ராஹிம் ஜத்ரன் பார்ட்னர்ஷிப்

ஆப்கானிஸ்தான் அணியின் ஓபனர்களான குர்பாஸ் - ஜத்ரன் ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர். நியூசிலாந்து பந்து வீச்சை தைரியமாக எதிர்கொண்டு பவுண்டரி, சிக்ஸர்கள் என வெளுத்து வாங்கி, முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தனர்.

குர்பாஸ் 56 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். தனது இன்னிங்ஸில் 5 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என அதிரடி காட்டினார். இப்ராஹிம் ஜத்ரன் நிதானமாக பேட் செய்து 41 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். அவர் தனது இன்னிங்ஸில் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடித்தார்.

அதிக விக்கெட்டுகள், அதிக ரன்கள் இடத்தில் ஆப்கானிஸ்தான் வீரர்கள்

ஆப்கானிஸ்தான் அணி வேகப்பந்து வீச்சாளரான ஃபசல்ஹக் ஃபரூக்கி, உகாண்டாவுக்கு எதிரான முதல் போட்டியில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தனது பார்மை இந்த போட்டியிலும் தொடர்ந்த அவர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதையடுத்து தற்போது 9 விக்கெட்டுகளுடன் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலராக உள்ளார்.

அதேபோல் பேட்டிங்கிலும், ஆப்கானிஸ்தான் ஓபனரான ரஹ்மனுல்லா குர்பாஸ் 156 ரன்கள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். மற்றொரு ஓபனரான இப்ராஹிம் ஜத்ரன் 114 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டி20 உலகக் கோப்பை 2024