HT Yatra: பெருமாளை வேண்டிய வள்ளி.. முருகனின் துணைவியார் பிறந்த இடம்
வள்ளிமலை முருகன் கோயில் வரலாறு குறித்து இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட முருகப் பெருமான் உலகம் முழுவதும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். பல்வேறு சிறப்பு தளங்கள் தமிழ்நாட்டில் பல புராண வரலாறுகளைக் கொண்டு அமைந்துள்ளது. அப்படிப்பட்ட சிறப்புமிகு திருக்கோயில்களில் ஒன்றுதான் வள்ளி மலை சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்.
முருகனை கணவனாக அடைய வேண்டுமென வள்ளி விஷ்ணு பகவானின் பாதத்தை வைத்து இந்த திருத்தலத்தில் வழிபட்டதாக கூறப்படுகிறது. திருமணமாகாதவர்கள் இந்த திருக்கோயிலில் வந்து பிரார்த்தனை செய்தால் விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. மலையில் அமைந்துள்ள இந்த கோயிலில் குடவரை சன்னதியில் வள்ளி தெய்வானையுடன் முருக பெருமான் காட்சி கொடுக்கின்றார்.
தலத்தின் பெருமை
வேடர் குலத்தில் வள்ளி பிறந்தவர் என்பதால் முருகனுக்கு அர்த்த ஜாம பூஜையில் தேனும் திணைமாவும் நைவேத்தியமாக படைக்கப்படுகின்றது. இந்த திருத்தலம் வள்ளி வாழ்ந்த இடம் என்கின்ற காரணத்தினால் இந்த மலைக்கு வள்ளிமலை என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மலைக்கோயில் மற்றும் அடிவாரத்தில் வள்ளிக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி தனது கையில் உண்டி வில், கவன் கல் உள்ளிட்டவைகளை வைத்திருப்பார். இந்த திருத்தலத்தின் தல விருட்சமாக வேங்கை மரம் இருந்து வருகிறது.
இந்த திருத்தளத்தில் கூடுதல் சிறப்பாக தேர் திருவிழாவானது நான்கு நாட்கள் நடைபெறும். இந்த திருவிழாவின் போது வேடுவ மக்கள் வள்ளி தங்கள் வீட்டுப் பெண் என்பதற்காக அனைத்து விதமான பொருட்களையும் சீதனமாக கொடுப்பார்கள்.
தல வரலாறு
ஒரு வனத்தில் ஒருமுறை முனிவர் வேடத்தில் விஷ்ணு பகவான் தவம் இருந்தார் அப்போது மான் வடிவில் லட்சுமிதேவி அவர் முன்பு வந்தார் அப்போது விஷ்ணு பகவானான முனிவர் அந்த மானை பார்த்தார். இதனால் அந்தமான் கருவுற்றது.
அப்போது அந்தமான் வள்ளி கொடிகளின் இடையில் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தது. அந்த வழியாக வந்த வேடுவ தலைவன் நம்பிராஜன் குழந்தையை எடுத்து வளர்த்தார் அந்த குழந்தைக்கு வள்ளி என பெயரிட்டார்.
குமரியாக வளர்ந்த வள்ளியை அந்த வழியாக வந்த முருக பெருமான் சந்தித்தார், அவரை விரும்பினார். முருகப்பெருமான் விரும்பியதை அறிந்த நம்பிராஜன் திருத்தணியில் வைத்து முறைப்படி முருகப்பெருமானுக்கு வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். அதன் பின்னர் முருகப்பெருமானிடம் நம்பிராஜன் வேண்டிக்கொண்ட வேண்டுதலுக்கு இணங்க இந்த குன்றின் மீது முருகப்பெருமான் காட்சி கொடுத்தார்.
அமைவிடம்
இந்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வேலூரில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் உள்ளன.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9