தமிழ் செய்திகள்  /  Astrology  /  You Can Know About The History Of Trichy Malaikottai Ucchi Pillayar Temple

HT Yatra: ரங்கநாதரை கீழே வைத்த பிள்ளையார்.. மலையின் உச்சியில் அமர்ந்தார்.. மக்களைக் காக்கும் மலைக்கோட்டை

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 18, 2024 06:00 AM IST

Malaikottai Ucchi Pillayar: மலையின் உச்சியில் அமர்ந்திருக்கக் கூடிய இந்த விநாயகரை வழிபட்டால் எடுத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர். குழந்தைகளின் கல்வி, வேலை, திருமணம், உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் இந்த விநாயகரை அனைவரும் வழிபட்டு செல்கின்றனர்.

உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்
உச்சிப்பிள்ளையார் திருக்கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

எந்த கோயிலுக்கு சென்றாலும் முதலில் வணங்க வேண்டிய தெய்வமாக விநாயகர் வீற்றியிருப்பார் பல கடவுள்கள் பெரிய பெரிய கோயில்களில் அமர்ந்திருந்தாலும் மரத்தடியில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுக்கக் கூடியவர் விநாயகர்.

சாதாரண நிலையில் இருந்து உச்சநிலை வரை அனைத்து நிலை கோயில்களிலும் காட்சி கொடுக்கக்கூடிய இறைவனாக விநாயகர் விளங்கி வருகின்றார். அப்படி சிறப்பு வாய்ந்த கோயில்களில் ஒன்றாக விளங்கி வருவது திருச்சி மாவட்டத்தில் இருக்கக்கூடிய மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில். இந்த திருக்கோயில் திருச்சி மாநகரத்தின் ஒரு மிகப்பெரிய அடையாளமாக இன்று வரை திகழ்ந்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ளவர்களிடம் மலை கோட்டை என்று கூறினால் யோசிக்காமல் திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயில் என அனைவரும் கூறுவார்கள். அந்த அளவிற்கு மிகவும் பிரபலமடைந்து சிறப்புமிக்க திருக்கோயிலாக விளங்கி வருகின்றது.

தலத்தின் பெருமை

மலையின் உச்சியில் அமர்ந்திருக்கக் கூடிய இந்த விநாயகரை வழிபட்டால் எடுத்த காரியம் அனைத்தும் நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர். குழந்தைகளின் கல்வி, வேலை, திருமணம், உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் இந்த விநாயகரை அனைவரும் வழிபட்டு செல்கின்றனர். அதேபோல வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுவதாக கூறி நேர்த்தி கடனும் செலுத்தி வருகின்றனர்.

நேர்த்திக்கடனாக சிதறு தேங்காய் உடைத்தல், கொழுக்கட்டை, படைத்தல், அருகம்புல், மாலை சமர்ப்பித்தல், விநாயகருக்கு பாலாபிஷேகம் செய்தல், அன்னதானம் செய்தல் என அனைத்து செயல்பாடுகளும் இங்கு நடந்து வருகின்றன.

இந்த மலைக்கோட்டையில் இருந்து பார்க்கும் பொழுது திருச்சி மாநகரம் முழுவதுமாக தெரியும். இந்த உச்சிப்பிள்ளையார் திருக்கோயிலில் ஆயிரங்கால் புனித மண்டபம் அமைந்துள்ளது இதுவே இந்த கோயிலின் மிகப்பெரிய சிறப்பாகும்.

ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் அவருடைய ஆட்சி காலத்தில் இந்த திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலை கட்டியதாக கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது. இந்த உச்சிப் பிள்ளையார் கோயிலுக்கு கீழே தாயுமானவர் கோயில் அமைந்துள்ளது இந்த திருத்தலம் தேவாரப் பாடலில் இடம்பெற்றுள்ளது என்பது மேலும் சிறப்பாகும்.

தல வரலாறு

 

ராவணனை வதம் செய்துவிட்டு சீதாவை ராமர் அயோத்திக்கு அழைத்துச் செல்ல தொடங்கினார் அப்போது அவருக்கு துணையாக சுக்கிரீவன், விபீஷணன் மற்றும் ஆஞ்சநேயர் உடன் இருந்தார்கள். அயோத்தியில் ராமருக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது அதற்குப் பிறகு அங்கிருந்து விபீஷணன் ராமரிடம் கூறிவிட்டு நினைவு பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக்கொண்டார்.

தெற்கு நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது அகண்ட காவிரியை கண்டு அங்கு சற்று ஓய்வெடுக்க அவர் நினைத்தார். அப்போது அருகே இருந்த சிறுவனிடம் விபீஷணன் சிலையை கொடுத்துவிட்டு ஆற்றங்கரைக்கு சென்று விட்டு திரும்பி வந்தார். அப்போது அங்கே சிலை கீழே இருந்தது அந்த சிறுவனை காணவில்லை. விபீஷணன் வருவதற்கு முன்பாகவே சிலையை கீழே வைத்துவிட்டு அருகே இருந்த மலையின் உச்சிக்குச் சென்று அந்த சிறுவன் அமர்ந்து கொண்டார்.

கீழே இருந்த சிலையை விபீஷணன் எடுக்க முயற்சிக்கும் பொழுது அந்த சிலை வரவே இல்லை. இலங்கைக்கு கொண்டு செல்ல இருந்த ரங்கநாதர் சிலை திருச்சி மாநகரத்திலேயே அமர்ந்தது. அதற்கு முக்கிய காரணம் விநாயகர் தான். தற்போது ஸ்ரீரங்கத்தில் இருக்கக்கூடிய ரங்கநாதரின் சிலை இருப்பதற்கு காரணம் விநாயகர் தான்.

சிலையை கீழே வைத்து விட்டு மலையின் உச்சியில் அமர்ந்த சிறுவன் மீது கோபம் அடைந்து விபீஷணன் அவர் தலையில் ஒரு குட்டு வைத்தார் எனக் கூறப்படுகிறது. உச்சி பிள்ளையார் கோயிலில் அமர்ந்திருக்க கூடிய விநாயகரின் தலையில் இன்றும் அந்த சுவடு இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்ரீரங்கநாதரோடு சேர்ந்து மக்களை காப்பதற்காக மலை உச்சியில் விநாயகர் பெருமான் அமர்ந்திருப்பதாக தல வரலாறு கூறுகிறது.

அமைவிடம்

 

திருச்சி மாவட்டத்தின் மையப்பகுதியில் இந்த உச்சிப்பிள்ளையார் திருக்கோயில் அமைந்துள்ளது. மலைக்கோட்டை என அனைவராலும் அழைக்கப்படும் இந்த கோயிலுக்கு அருகில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளன.

WhatsApp channel