HT Yatra: திப்பு சுல்தானின் கனவு.. காணிக்கை கேட்ட விநாயகர்.. கோயிலில் அமர்ந்தார் பிரசன்ன விநாயகர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: திப்பு சுல்தானின் கனவு.. காணிக்கை கேட்ட விநாயகர்.. கோயிலில் அமர்ந்தார் பிரசன்ன விநாயகர்

HT Yatra: திப்பு சுல்தானின் கனவு.. காணிக்கை கேட்ட விநாயகர்.. கோயிலில் அமர்ந்தார் பிரசன்ன விநாயகர்

Suriyakumar Jayabalan HT Tamil
Mar 22, 2024 06:20 AM IST

Prasanna Vinayagar Temple: திப்பு சுல்தான் குளக்கரைக்கு அருகே கோயில் அமைத்துள்ளார். அதற்குப் பிறகு ஆட்சி செய்த அனைவரும் இந்த கோயிலை சீரமைத்து பெரிய அளவில் வழிபட்டு வந்துள்ளனர். தற்போது வரை மும்மூர்த்திகள் அமைந்த தலமாக இந்த உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் திருக்கோயில் விளங்கி வருகிறது.

உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோயில்
உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோயில்

உலகம் முழுவதும் ஏராளமான பக்தர்கள் கூட்டத்தை கொண்டிருப்பவர் விநாயகர். மிகப்பெரிய கோயில்களில் அமர்ந்திருக்கக்கூடிய கடவுள்களுக்கு மத்தியில் மரத்தடியில் தொடங்கி மலை உச்சி வரை எளிமையான மக்கள் வணங்கும் தெய்வமாக வீற்றிருக்கிறார் விநாயகர்.

பல சிறப்பு வாய்ந்த கோயில்களில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் விநாயகர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் திருக்கோயில்.

தலத்தின் பெருமை

 

இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய விநாயகர் பெருமான் ஆறடி உயரம் கொண்டவராக திகழ்ந்து வருகிறார். ராஜ கம்பீரத்தில் இருக்கக்கூடிய இந்த விநாயகப் பெருமானுக்கு மூஷிக வாகனமும் மிகப்பெரிய உருவத்தில் இருக்கும். இந்த கோயிலுக்கு முன் மண்டபத்தின் மேற்கூறையில் 12 ராசிகள் இருக்கக்கூடிய சிற்பம் ஒன்று இருக்கும்.

இந்த கோயிலின் தலவிருட்சமாக வன்னி மரம், வில்வமரம், அரசமரம் ஆகியவை உள்ளன. இங்கு காணப்படுகின்ற ஆதி விநாயகர் மன்னர் திப்பு சுல்தான் வணங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கோயிலின் ராஜகோபுரத்திற்கு நேராக காசி விஸ்வநாதர் காட்சி கொடுத்து வருகிறார்.

மேலும் கோயிலின் வடமேற்கு பகுதியில் சவுரிராஜ பெருமாள் தனது துணைவியார் கண்ணபுர நாயகியோடு காட்சி கொடுத்து வருகிறார். அதேசமயம் ஆஞ்சநேயர் சன்னதியும் அருகே உள்ளது. குறிப்பாக இந்த கோயில் வைணவம் மற்றும் சைவத்தின் ஒற்றுமையை நிலை நிறுத்தும் கோயிலாக இருந்து வருகிறது.

ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய கிருத்திகை திருநாளில் இங்கு வீற்றிருக்கக் கூடிய விநாயகர் வெள்ளி தேரில் ஊர்வலமாக பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். இந்த கோயிலின் மிகப்பெரிய சிறப்பில் இதுவும் ஒன்று.

தல வரலாறு

 

இந்த கோயில் வீற்றிருக்கக்கூடிய இந்த பகுதி முன்னொரு காலத்தில் வனப்பகுதியாக இருந்து வந்துள்ளது. இதனை திப்புசுல்தான் ஆட்சி செய்து கொண்டுள்ளார். பெரிய குளத்தோடு இயற்கையாகவே மலைகளை அரனாக வைத்து இந்த பகுதி பாதுகாப்பாக இருந்து வந்துள்ளது. உள்ளின் நுழையும் எதிரிகள் அவ்வளவு எளிதில் நுழைந்து விடாதபடி மிகவும் பாதுகாப்பான பகுதியாக இது இருந்து வந்துள்ளது.

அதனால் எதிரிகள் நுழைய முடியாத பகுதியாக திப்பு சுல்தான் சிறந்த ஆட்சியை செய்து வந்துள்ளார். அப்போது விநாயக பெருமான் அவரது கனவில் தோன்றியுள்ளார். கனவில், உனது நாட்டை நான் காத்து வருகிறேன் ஆனால் எனக்கு நீ ஒரு காணிக்கை கூட செலுத்தவில்லையே எனக் கூறியுள்ளார்.

அதற்குப் பிறகு திப்பு சுல்தான் குளக்கரைக்கு அருகே கோயில் அமைத்துள்ளார். அதற்குப் பிறகு ஆட்சி செய்த அனைவரும் இந்த கோயிலை சீரமைத்து பெரிய அளவில் வழிபட்டு வந்துள்ளனர். தற்போது வரை மும்மூர்த்திகள் அமைந்த தலமாக இந்த உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் திருக்கோயில் விளங்கி வருகிறது.

அமைவிடம்

 

உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் திருக்கோயில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து ஒரு மணி நேர தொலைவில் இந்த கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு செல்வதற்கு பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் அனைத்தும் உள்ளன.

Whats_app_banner