’லக்னம் என்றால் என்ன? ராசியை விட லக்னம் முக்கியம்! ஏன் தெரியுமா?’ ஜோதிடம் அறிவோம்!
ராசியை எந்த அளவுக்கு ஞாபகம் வைத்துக் கொள்கிறோமோ அதே அளவுக்கு லக்னம் நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.
பலருக்கும் தங்களது ராசி மற்றும் நட்சத்திரம் ஞாபகத்தில் இருக்கும். ஆனால் லக்னம் பற்றி பலருக்கும் தெரியாது. ஜோதிட விதிகளின் படி ஒருவரது ஜாதக பலன்களை அறிய முதலில் ’லக்னம்’ காரணமாக உள்ளது.
லக்னம் என்றால் என்ன?
ஜோதிடத்தை பொறுத்தவரை ராசி என்பது உடல் என்றால், லக்னம் என்பது உயிர் ஆகும். பூமி ஒருநாளைக்கு தன்னைத் தானே சுற்றிக் கொண்டு 365 நாட்களில் சூரியனை நீல்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றது. ஒருவருக்கு பிறந்தநாள், பிறந்தநேரம், பிறந்த நேரம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே லக்னம் கணிக்கப்படுகின்றது. ஒரு மனிதனின் ஆத்மா, அதன் பாவம் மற்றும் புண்ணிய காரியங்களை தீர்த்துக் கொள்வதற்காக பிறப்பெடுக்கும் இடமாக லக்னம் உள்ளது. ஒரு நபரின் இயல்பை லக்னத்தை வைத்தே தீர்மானிக்கிறார்கள். முன் ஜென்ம வினைகள், வாழ்கையில் முன்னேற்றம், வாழ்கை துணை, வணிகம், புத்திரபாக்கியம், அபிவிருத்தி, முன்னேற்றம் உள்ளிட்ட அனைத்தையும் துல்லியமாக கணிக்க லக்னம் இனியமையாதது ஆகும்.
லக்னத்தை கணிப்பது எப்படி?
உதாரணமாக மார்கழி மாதம் ஒன்றாம் தேதி காலை 10 மணிக்கு மதுரையில் ஒரு குழந்தை பிறந்த குழந்தைக்கு கும்ப லக்னம் என வைத்துக் கொள்வோம். இதற்கு எப்படி கும்ப லக்னம் என வரையறை செய்யப்பட்டது எனில், மார்கழி மாதம் ஒன்றாம் தேதி தனுசு ராசியில் சூரியன் பிரவேசிக்கிறார். ஆனால் சூரியனின் ஒளி ஆனது பூமி தன்னைத்தானே சுற்றுவதால், ராசி மண்டலங்கள் 12-லும் விழக்கூடியது. இதன் அடிப்படையில் காலை 10.30 மணிக்கு பிறந்த குழந்தைக்கு, மதுரையின் சூரிய உதயத்தை கணக்கில் கொண்டு கும்ப லக்னத்தில் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பிறந்ததாக கணக்கீடு செய்வர்.
மார்கழியில் சூரிய பகவான் தனுசு ராசியில் உதிப்பார். சூரிய பகவான் ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ராசியில் பிரயாணம் செய்வதை வழக்கமாக கொண்டவர். பூமி 365 நாட்கள் தனது நீள்வட்டப்பாதையை ஒரு முறை சுற்றி வரும் கணக்குதான் சூரியன் 12 ராசிகளையும் பிரவேசிக்கும் கணக்காக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. ஏறக்குறைய ஒவ்வொரு லக்னங்களில் 2 மணி நேரங்களை கொண்டது. அந்த ராசியின் ஊடே சூரியன் ஒளி குவிக்கப்படும் இடத்தை கொண்டு லக்னம் கணிக்கப்படுகின்றது.
சூரிய பகவானுக்கு ஆத்மகாரகன் என்ற பெயர் உண்டு. ஆத்மாவுக்கு அழிவு கிடையாது. நமது முற்பிறவியின் கர்ம வினைகளுகு ஏற்ப அதை தீர்த்துக் கொள்வதற்காக இப்பிறவியில் ஒரு குறிப்பிட்ட ஊரில், குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் போது சூரியன் ஒளி பிரயாணிக்கும் ராசி மண்டலமே லக்னம் கணிக்கப்படுகின்றது.
லக்னமும் பிற வீடுகளும்!
இந்த லக்னத்தை அடிப்படையாக கொண்டே 2ஆம் இடம் தன ஸ்தானம், 3ஆம் இடம் உபஜெய ஸ்தானம், 4ஆம் சுக ஸ்தானம், 5ஆம் இடம் பூர்வ புண்ணிய ஸ்தானம், 6ஆம் இடம் எதிரி ஸ்தானம், 7ஆம் இடம் களத்திர ஸ்தானம், 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானம், 9ஆம் இடம் பாக்கிய ஸ்தானம், 10 ஆம் இடம் தொழில் ஸ்தானம், 11ஆம் இடம் லாப ஸ்தானம், 12ஆம் இடம் மோட்ச ஸ்தானம் ஆகியவை கணிக்கப்படுகின்றது. ராசியை எந்த அளவுக்கு ஞாபகம் வைத்துக் கொள்கிறோமோ அதே அளவுக்கு லக்னம் நினைவில் வைத்துக் கொள்வது அவசியம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.