HT Temple SPL: 'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்'-குன்றத்தூர் முருகன் கோயிலில் விஷேஷம் என்ன?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Temple Spl: 'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்'-குன்றத்தூர் முருகன் கோயிலில் விஷேஷம் என்ன?

HT Temple SPL: 'குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்'-குன்றத்தூர் முருகன் கோயிலில் விஷேஷம் என்ன?

Manigandan K T HT Tamil
May 24, 2023 05:50 AM IST

Lord Murugan Temple: குன்றத்தூர் முருகன் கோயிலில் நடைபெறும் திருமணத்தில் மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருந்தால் அவர்களின் திருமணத்திற்கு திருமணக் கட்டணம் வசூலிக்கப்படாது.

குன்றத்தூர் முருகன் கோயில்
குன்றத்தூர் முருகன் கோயில்

இது போன்ற போட்டோக்கள்

குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் என்ற பொன்மொழிக்கு ஏற்றாற்போல் குன்றத்தூரில் குன்றில் வள்ளி, தெய்வானையுடன் அருள்பாலித்து வருகிறார்.

பெரிய புராணம் அருளிய தெய்வச் சேக்கிழார் பெருமான் அவதரித்த ஊர் குன்றத்தூர். குன்று ஒன்று இவ்வூரில் உள்ளதால் குன்றத்தூர் என்று பெயர் பெற்றது.

வடதிசை நோக்கி அமர்ந்து முருகன் அருள்பாலிப்பது இத்தலத்திற்கு ஒரு தனிச்சிறப்பாக உள்ளது.

கருவறைக்குள் வள்ளி, தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியரின் சுந்தரக்கோலம் காணலாம். அதில் ஓர் அதிசயம் என்னவென்றால் மூவரையும் ஒரு சேர தரிசிக்க முடியாது. ஒருபக்கத்தில் இருந்து பார்த்தால் வள்ளியுடன் முருகப் பெருமானும், மற்றொரு பக்கத்தில் இருந்து பார்த்தால் தெய்வானையுடன் முருகப் பெருமானையும் தரிசிக்க முடியும்.

ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தில் காட்சி அளிக்கிறார் இத்தல இறைவன்.

ஸ்தல விருட்சம் வில்வ மரம். ஸ்தல தீர்த்தம் சரவணப் பொய்கை. இக்கோயிலில் ஒரே ஒரு கல்வெட்டு மட்டுமே இருக்கிறது. அதன் வாயிலாக கி.பி. 1726இல் இக்கோயில் மதுரை நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதை தெரிந்து கொள்ள முடிகிறது.

இத்தல இறைவன் மீது அருணகிரிநாதர் மூன்று பாடல்களை இயற்றியிருக்கிறார். அவை, அழகெறிந்த, சந்திரபிடியதன், நேசாதாரா என தொடங்கும் பாடல்கள் ஆகும்.

84 படிகளைக் கொண்ட முகப்பில் 16 கால்மண்டம் உள்ளது. அதைக் கடந்து படிகளில் ஏறி வழியில் உள்ள வலஞ்சுழி விநாயகரைத் தரிசித்து ராஜகோபுர தோரண வாயிலை அடைந்து வில்வ மர விநாயகரை தரிசனம் செய்யலாம்.

திருஊரக பெருமாள் கோயில், சேக்கிழார் கோயில்
திருஊரக பெருமாள் கோயில், சேக்கிழார் கோயில்

நவகிரக சன்னதி, பைரவர் சன்னதி, தட்சிணாமூர்த்தி சன்னதி, துர்க்கை அம்மன் சன்னதி, தலவிருட்சம் வில்வம் என பலவற்றை தரிசிக்கலாம்.

இக்கோயிலில் திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. குழந்தை வரம் வேண்டி தொட்டில் கட்டுதலை பக்தர்கள் செய்கின்றனர்.

தமிழ் புத்தாண்டு, சித்திரை கிருத்திகை, சித்திரை சஷ்டி விழா, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பூரம், விநாயகர் சதுர்த்தி, கந்த சஷ்டி விழா 7 நாட்கள், கந்த சஷ்டியில் திருக்கல்யாணம் நிறைவு நாள், திருக்கார்த்திகை தீபம், ஆங்கிலப் புத்தாண்டு, திருப்புகழ் படிவிழா, பொங்கல் திருநாள், தைப்பூசம், தைக்கார்த்திகை, தைப்பூசம், மாசிமகம், பங்குனி கிருத்திகை, பங்குனி உத்திரம் ஆகியவை இத்திருக்கோயிலில் விஷேஷ தினங்கள் ஆகும்.

இதுதவிர, மாதாந்திர சஷ்டி, மாதாந்திர கிருத்திகைகள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.

இத்திருக்கோயில் காலை 6.30 மணி முதல், மதியம் 1.30 மணி வரையும், மாலை 3.30 மணி முதல், இரவு 8.30 மணி வரையும் திறந்திருக்கும்.

குன்றத்தூர் முருகன் கோயிலுக்கு பின்புறம் படிகள் இருக்கின்றன. அங்கே சென்று பார்த்தால் ஒட்டுமொத்த ஊரும் ரம்மியாக காட்சியளிக்கிறது.

முருகன் கோயில் பின்புறம் படிக்கட்டில் அமர்ந்து இயற்கையை ரசிக்கும் பக்தர்
முருகன் கோயில் பின்புறம் படிக்கட்டில் அமர்ந்து இயற்கையை ரசிக்கும் பக்தர்

இக்கோயிலுக்கு கார், பைக்கில் மலை மீது ஏறிச் செல்வதற்கு தனியாக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பார்க்கிங் கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படுகிறது.

பார்க்கிங் ஏரியாவில் கழிவறை வசதி உள்ளது. மொட்டை அடிக்கவும் தனியாக இடம் இருக்கிறது.

மலையடிவாரத்தில் திருஊரகப் பெருமாள் கோயிலும், கந்தழீஸ்வரர் கோயிலும், அதற்கு அருகில் சேக்கிழார் கோயிலும் அமைந்துள்ளன.

இதுதவிர, குன்றத்தூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் வடநாகேஸ்வரம் கோயிலும் அமைந்துள்ளது.

Whats_app_banner

டாபிக்ஸ்