Lord Vinayagar: விநாயகருக்கு அருகம்புல் சாத்தப்படுவது ஏன் தெரியுமா?
Vinayagar Story: பல அருகம்புல்லை இணைத்து கணபதியின் தலை, மற்ற பாகங்களில் தடவ அனல் தணிந்து விநாயகர் மகிழ்ந்தார்.
எந்த ஒரு செயலும் தங்கு தடை இன்றி நிறைவேற முதலில் ஸ்ரீ விநாயகரை வழிபடுவது ஆன்மீக உலகின் நடைமுறை. இவரே முழு முதற் கடவுள். சங்கடங்களைத் தீர்த்து வைத்து சகல சௌபாக்யங்களையும் தருபவர். ஆகவே தான் பாட்டுக்கொரு புலவன் பாரதி கூட"உமைக்கினிய மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ வைப்பான்" என அழகாகக் கூறுவார்.
இந்த ஆனை முகத்தோனின் அருள் கிட்டிவிட்டால் வாழ்வில் அதை விட பேரதிர்ஷ்டம் வேறு இல்லை.
ஒரு சமயம் அனலாசுரன் எனும் சக்தி வாய்ந்த அசுரன் கணபதியிடம் சண்டையிட்டு சிறிது ஓய்ந்த நேரத்தில், கணபதி அவனைத் தூக்கி விழுங்கியே விட்டார். இதனால் விநாயகரின் வயிறு பயங்கரமாக எரிய ஆரம்பித்தது.வெப்பம் தாங்காது தவித்தார்.
தேவர்கள், கங்கை நீரை ஊற்றியும், பனிப்பாறைகளைப் பெயர்த்தெடுத்து, தலையிலும் உடலிலும் வைத்துக்கட்ட வெப்பம் தணியவில்லை. அப்போது, சப்த ரிஷிகளான கத்ரி, பிருகு, குத்சர், வசிஸ்டர், கவுதமர், காலிபர் அனைவரும் சேர்ந்து, ஒரு சாண் அளவில் பல அருகம்புல்லை இணைத்து கணபதியின் தலை, மற்ற பாகங்களில் தடவ அனல் தணிந்து விநாயகர் மகிழ்ந்தார்.
தனக்கான பூஜைப் பொருள் அருகம்புல் என அகமகிழ்ந்தார். இது தூர்வை, மேகாரீ, பதம், முட்டம் என்றெல்லாம் சிறப்பிக்கப்படும் சிறந்த பயனுள்ள மூலிகை அருகம்புல்.
ஒரு சமயம் அவந்தி தேசத்தை வல்லவனாகவும் நல்லவனாகவும், சிறிது தலைக்கனம், கர்வம் கொண்டவருமான சுலப ராஜன் என்பவன் ஆண்டு வந்தான். அவனின் மனைவி பதிவிரதை, சுபத்திரை என்று பெயர். அரசனுக்கு அனுசரணையுடன் துணையாக இருந்து நல்லாட்சி நடத்தினர்.
ஒருநாள் அரசவைக்கு கிழிந்த உடையுடன், தலை, முகம் ஆகியவற்றில் ரோமங்களோடும், மதுசூதனன் எனும் சிவ பக்தன் ஒருவன் யாசகம் வேண்டி நின்ற பொழுதில், அரசன் கேலியும், கிண்டலுமாக அவனைப் பேச, யாசகன் பொறுமை இழந்து வெகுண்டு போய், ‘அரசன் காளையாக் கடவது’ என்று சாபமிட்டார்.
அதைக் கண்ட அரசி யாசகம் கேட்க வந்தவன் அரசனுக்கு சாபமிடுவதா? என சினம் கொண்டு, அவன் கழுதையாக போக என சபித்து விட்டாள். குற்றம் செய்து விட்டு, அவள் சபிக்கவும் செய்த செயலால் நொந்து போன யாசகன் அரசியை வசதிகளை இழந்து கடும் கஷ்டத்தில் வாழும் ஏழைப் பெண்ணாகிவிட வேண்டும் என மீண்டும் சபித்து வெளியேறினான்.
மன்னன் சுபலன், எருதாக ஆகி வயலை உழுது கொண்டும், யாசகன் கழுதையாகி பொதி சுமந்தும், அரசி தரித்திரம் பிடித்து கஷ்ட ஜீவனம் நடத்திக் கொண்டும் வரலாயினர். காலச் சக்கரம் சுழன்றது.
அன்று விநாயகர் சதுர்த்தி, மழையும், காற்றும் வீசியபடி இருந்தது. கோயில் மணி, பூஜைகள் நடப்பதை தெரிவித்துக் கொண்டிருக்க மழைக்கு, தலையில் புல் கட்டுடன் அந்தப் பெண் ஆலய பிரகாரத்தில் ஒதுங்கி கட்டை மேடையில் வைத்தாள்.
கழுதை ஓடிவந்து, திருட்டுத்தனமாக புல்லை இழுத்து உண்ண ஆரம்பிக்க, அதைக்கண்ட பெண், குச்சியால் அதை அடித்து அதை விரட்ட, கழுதை தன் பின்னங்கால் உதைதது. அங்கு நின்ற எருது மீது பட, கழுதை ஓட, எருது துரத்த, புல் கட்டை பெண் கைப்பற்ற முயல, இந்த கலேபரத்தில், புல் கட்டு அவிழ்ந்து, விநாயகர் தலை, உடற் பாகங்களை மூட அருகம் புல்லினால் அலங்கரித்த கணபதி காட்சி தந்தார்.
இரவு முழுதும் பெய்த மழையில் நனைந்து அலைந்த மூன்று உயிர்களும் இறப்பெய்திருந்தன.
அருகம் புல்லினால் அர்ச்சனை செய்ததற்கொப்ப, அவர்தம் செயல் அவர்களின் ஆன்மா சொர்க்கம் செல்ல வைத்த விவரத்தைக் தெரிந்து கொண்ட தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் அளவிட முடியாத ஆச்சரியத்தில் உவகை எய்தி, அருகம் புல்லின் அளவிடமுடியாத அருமை பெருமைகளையும்,மகிமைகளையும் தெரிந்து அதை எவ்வாறு மூலிகையாக மக்கள் பயன்படுத்தலாம் என்கிற கோணத்தில் புரிய வைக்க ஆரம்பித்தனர்.
-சுப்பிரமணியன்,
ஆன்மிக ஆர்வலர்,
சென்னை.
டாபிக்ஸ்