தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  திருப்பதி போறீங்களா...? ஏப்ரல் மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் ரலீஸ் எப்போது? - விபரம் இதோ..!

திருப்பதி போறீங்களா...? ஏப்ரல் மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் ரலீஸ் எப்போது? - விபரம் இதோ..!

Karthikeyan S HT Tamil
Jan 23, 2024 12:07 PM IST

Tirupati Temple: திருப்பதி ஏழுமலையானை வரும் ஏப்ரல் மாதத்தில் பக்தர்கள் தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்வது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்

உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தால் திருப்பதி கோயில் எப்போதும் நிரம்பி வழிந்தபடியே காட்சியளிக்கிறது.

குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். திருமலைக்கு வரும் பக்தர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி உள்ளது. சமீபத்தில்தான் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து முடிந்தது. 

பத்து நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வைகுண்ட வாசல் தரிசனத்தின் போது டோக்கன் வைத்திருந்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 2 ஆம் தேதி முதல் டோக்கன் இல்லாத பக்தர்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், திருப்பதி ஏழுமலையானை வரும் ஏப்ரல் மாதத்தில் பக்தர்கள் தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கொள்வது குறித்து திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஏப்ரல் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் நாளை (ஜன.24) ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

காலை 10 மணி முதல் https://tirupatibalaji.ap.gov.in என்கிற தேவஸ்தான இணையத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. இதையடுத்து திருமலையில் தங்கும் அறைகளுக்கான முன்பதிவு டிக்கெட்கள் நாளை மறுநாள் (ஜனவரி 25) வெளியிடப்பட உள்ளது. இதற்கேற்ப பக்தர்கள் உரிய திட்டமிடல்களை மேற்கொள்ளலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான முன்னுரிமை அடிப்படையிலான தரிசன டோக்கன்கள் இன்று (ஜன.23) மதியம் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். ஏப்ரல் மாதம் திருமலையில் தேவஸ்தானத்தின் ஸ்ரீவாரி சேவை மூலம் சேவை செய்ய விரும்பும் பக்தர்கள் இம்மாதம் 27ஆம் தேதி காலை 11 மணிக்கு தங்களுடைய பெயர்களை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முன் பதிவு செய்து கொள்ளலாம்.  அன்று மதியம் 12 மணி முதல் திருப்பதி மலையில் நடைபெறும் நவநீத சேவையில் பங்கு பெற விரும்பும் பக்தர்களும், பகல் 1 மணி முதல் உண்டியல் காணிக்கை பணம் கணக்கிடும் பரக்காமணி சேவையில் பங்கு பெற விரும்பும் பக்தர்களும் தங்கள் பெயர்களை தேவஸ்தானத்தின் https://tirupatibalaji.Ap.Gov.in  இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9