Tamil News  /  Astrology  /  Thaipoosam 2024 Worship Lord Muruga Today You Will Get Many Benefits

Thaipoosam 2024: ‘வேலவனால் வெற்றிகள் குவியும், குகனால் குறைகள் விலகும்’-தைப்பூச நாளில் முருகனை வழிபடுங்க!

Manigandan K T HT Tamil
Jan 25, 2024 06:42 PM IST

கடக ராசிக்கு உரியது பூச நட்சத்திரம். இந்த ராசியின் அதிபர் சந்திரன்.

பகவான் முருகன்
பகவான் முருகன் (Pixabay)

ட்ரெண்டிங் செய்திகள்

சூரிய பலத்தோடு இருக்கும் மாதம் தை மாதம். தேவர்களின் விழிப் புணர்ச்சி காலம். இதில் வரும் பூச நட்சத்திரத்தில் கந்தனை வழிபட,கவலை வாசலைக் கடந்து வராது.வேலவனால் வெற்றிகள் குவியும்,குகனால் குறைகள் விலகும். இதுபோல 6 முகத்திற்கும் அருணகிரிநாதர் அற்புத விளக்கம் சொல்வார்.

கடக ராசிக்கு உரியது பூச நட்சத்திரம். இந்த ராசியின் அதிபர் சந்திரன். தை மாதத்தில், சூரியன் மகர ராசியில் இருப்பார். இந்த சமயத்தில் தான், சூரியனும், சந்திரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளும் நிகழ்வு நடக்கும். சிவனின் அம்சமாக சூரியனும், அம்பிகை அம்சமாக சந்திரனும் இருப்பதால், சிவனும் சக்தியும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொள்ளும் தைப்பூச நாளில் வழிபட்டால், நம் விருப்பங்கள் இனிதே நிறைவேறும். ஆகவே, சிவன், பார்வதி, முருகன் இவர்கள் மூவருக்கும் உரிய நாளே இது.

27 நட்சத்திரங்களில், எட்டாவது நட்சத்திரம், இந்த பூசம் . சமஸ்கிருதத்தில் இதனை புஷ்பம் என்பர். புஷ்டி என்றால் பலம் என்று பொருள். அதிலிருந்து வந்ததுதான் புஷ்யம். இது மிகவும் சிறப்பான ஒன்று என,"நட்சத்திர சிந்தாமணி" எனும் நூல் விளக்கும். இராமாயண பரதன், இந்த பூச நட்சத்திரத்தில் பிறந்தவர். மதிப்பும், வல்லமையும் சேர்ந்த கலவையான மனிதர்களின் நட்சத்திரம் இது.

சிவனும், சக்தியும் இணைந்ததாலேயே பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டு, உலகம் இயங்குவதாக, நம் புராணங்களில் சொல்லப்படுகிறது. அப்படி சிவ, சக்தி இணைந்த புண்ணிய தினமாக தைப்பூசம் உள்ளது.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்றது. பல ஆண்டுகளாக போர் நடைபெற்ற மோதலால், அசுரர்களை அழிக்க முடியவில்லை. எனவே,எம்பெருமான் சக்தியால் உருவாக்ககப் பட்ட அவதாரமே கந்தன். அன்னை பார்வதி தேவி,ஆண்டி கோலத்தில்,பழனி மலை மீது,வீற்றிருந்த,முருகப் பெருமானுக்கு,ஞான வேல் வழங்கியது இந்த தை பூச நன்நாளில் தான்.

அதன் காரணமாகவே மற்ற முருகன் கோயிலைக் காட்டிலும்,பழனி மலையில் தைப்பூசத் திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். தொல்லை கொடுத்த தேவர்களை திருச்செந்தூர் எனப்படும் திருச்சீரலை வாயில் வைத்து வதம் செய்து தீய சக்திகளை அழித்து ஒழித்தார்.

இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தியாக, இறைவனே இருக்கிறார் என்பது உணர்த்தப்பட்ட புண்ணிய நாள், தைப்பூச நன்னாள் ஆகும்.

தேவர்களின் குருவாக விளங்கும், பிரகஸ்பதி, என்னும் குரு பகவான், பூச நட்சத்திரத்தின் அதிதேவதை. பதஞ்சலி முனிவர், வியாக்கிரபாதர் முனிவர்கள் இருவருக்கும் நடராஜ பெருமான், தனது தாண்டவத்தைக் காட்டி அருளியது, தைப்பூச நன்நாளில் தான். அத்துடன், வாயு பகவானும், வர்ண பகவானும், அக்னி பகவானும், ஈசனின் அதீத சக்தியை உணர்ந்த நாளாக இந்த நாள் போற்றப்படுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கும், முருகனடியார்கள் பலர், பாத யாத்திரையாக செல்வார்கள். முருகனை தரிசனம் செய்வார்கள். தீராத நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் குணம் அடைவார்கள். ஆரோக்கியம், பெறுவார்கள். தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் பௌர்ணமியாக இருக்கும். ஆகவே, குழந்தைகளுக்கு காது குத்துதல், ஏடு தொடங்குதல், போன்றவற்றை செய்வர். முருகனின் அடியார்கள், காவிரி எடுத்தல், கற்பூர சட்டி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள்.

திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில், தைப்பூசத்தையொட்டி ,விசேஷ பிரம்மோற்சவம் நடைபெறும். தைப்பூச நாளில், இங்கே ,"அஸ்வ மேத பிரதட்சணம்" என்று கோவிலில் சுற்றி வருவது மிகவும் விசேஷம்.

11 சக்திகளை ஒன்றிணைத்து, வேல் ஒன்றை ஆயுதமாக பார்வதி தேவி முருகனுக்கு வழங்கிய நாள் தைப்பூசம். இன்று, முருகப்பெருமானை நினைத்து, தைப்பூச விரதம் இருந்தால், பகை அழியும், நவக்கிரக தோஷம் நம்மை நெருங்காது, குழந்தை பேறு இல்லாதவருக்கு குறை நீங்கும், நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும் என்று தைப்பூச விரதம் மகிமை பற்றி கூறுவர்.

"சித்தன்" என்ற பெயர் முருகனுக்கு உண்டு. முன்பு திருவாவினன்குடிக்கு "சித்தன் வாழ்வு" என்று பெயர் இருந்தது. இக்கோயிலை, நக்கீரர், திருமுருகாற்றுப்படையில், மூன்றாவது படை வீடாக குறிப்பிடுகிறார். இவரை வணங்கிய பிறகு, மலைக் கோயிலுக்கு செல்வது விசேஷம் என்பர். இது பழனி மலை அடிவாரத்தில் உள்ள திருவாவினன்குடி.

உடற்பிணி, பிறவிப்பிணி இரண்டையும் நீக்கும் சக்தி உள்ள, முருகனின் தைப்பூசத்தைக் காண வேண்டாமா என, சிவனடியாரான ஞான சம்பந்தர், சென்னை, மயிலாப்பூரைச் சேர்ந்த, சிவநேசரின் மகளை, மீண்டும் உயிர் பெறச் செய்ய, கபாலீஸ்வரர் மீது பாடல்கள் பாடுகிறார்.

அதில் "நெய்ப்பூசும் ஒண்புழுங்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்" எனும் வரிகளிட்டு தை பூசத் திருவிழா சிறப்பினைச் சொல்லுவார். ஆத்ம பலமும்,மனோ பலமும் தரும் விழா இது. புகழ்பெற்ற கோயில்கள் தைப்பூசத்தை, பத்து நாள் திருவிழாவாகக் கொண்டாடும்,

திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோயில், திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயில்,தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர், மகாலிங்க சுவாமி கோயில், திருநெல்வேலி மாவட்டம், திருபுடைமருதூர் நாறும்பூ நாதர் ஆலயம் போன்றவை அதில் முக்கியமானவை.

பூச நட்சத்திரத்தில் தான், வள்ளியை ,முருகன் திருத்தணியில் திருமணம் செய்தார். தைப்பூச நாளில் தான், உலகம் படைக்கப்பட்டது. நிலம், நீர் நெருப்பு,காற்று, ஆகாயம் ஆகிய, பஞ்சபூதங்களும் இந்நாளில் தோன்றின. இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய அடிப்படையில் தான் ஆரம்பத்தில் சிவ பார்வதி வழிபாட்டில் இவ்விழா ஆரம்பித்ததாகவும், முருகனுக்கு வேல் வழங்கி இது முருகனுக்குரியதான பெருவிழாவாக மாறியது, பராக்கிரமம் நிறைந்தவர் கந்தன். இவர் பாதங்களைப் பற்ற, பிறவிச் சுழலில் இருந்து தப்பிக்கலாம். கந்து என்றாலே பற்றுக் கோடு என்கிற பொருள் உண்டு.

தைப்பூச நாளில், தொட்டது துலங்கும் என்பது மரபு. நரகாசுரனை கொன்ற நாளாக, தைப்பூசத்தைக் கருதி, பழனியில் விழா எடுக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள, மயிலம் மலைக் கோயிலில் இருந்து, அடிவாரத்திற்கு எழுந்தருளும் முருகனை தரிசிப்போருக்கு மறுபிறவி கிடையாது என்பர். சப்த கன்னியருக்கு, தைப்பூச நாளில் தான், கரூர், குளித்தலை, கடம்பவன நாதர் காட்சி கொடுத்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர், தன் தங்கை, சமயபுரத்தம்மனுக்கு சீர்வரிசை கொடுக்கும் நிகழ்வு தைப்பூசத்தன்று தான் நடைபெறும்.

வள்ளலாரின் சத்திய ஞான சபையில், ஜோதி தரிசனம் இந்த நாளில் காட்டப்படுகிறது. கச்சியப்ப சிவாச்சாரியார் அவர்கள், முருகனுக்குள், தந்தையின் பேரறிவும், தாயின் பெருங் கருணையும் சங்கமித்து இருக்கிறது என்பார்.

"ஏலவார் குழல் இறைவிக்கும்

எம்பிரான் தனக்கும்

பாலனாகிய

குமரவேல் நடுவுறும்

பான்மை, ஞால மேலுறும் இரவொடு

பகலுக்கும் நடுவாய்

மாலையான தொன்று

அழிவின்றி வைகுமாறு

ஒக்கும்" என்று போற்றிப் புகழ்வார்.

சிவன், பார்வதி நடுவில் முருகன் இருப்பதை, பாம்பன் ஸ்வாமிகள் "சோமாஸ்கந்த மூர்த்தம்" என சிறப்பித்து கூறுவார்.

"ஓம் , பற்றினேன் உந்தன் திருவடி போற்றி,

ஓம்,பதம் தந்து காத்திடுவாய்

பன்னிரு கையனே,

போற்றி போற்றி!"

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மீக எழுத்தாளர்,

அடையார், சென்னை.

தொடர்புக்கு: manivks47@gmail.com

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்