தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Templ Spl: சென்னையில் சுக்ரன் ஸ்தலம்-திருமணத் தடை, திருஷ்டி நீங்க செல்ல வேண்டிய கோயில்!

HT Templ SPL: சென்னையில் சுக்ரன் ஸ்தலம்-திருமணத் தடை, திருஷ்டி நீங்க செல்ல வேண்டிய கோயில்!

Manigandan K T HT Tamil
May 26, 2023 06:10 AM IST

Arulmigu Velleeswarar Thirukovil: சுக்ர தோஷம் இருப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் நித்ய பூஜைகள் மிகச் சிறப்பாக நடக்கின்றன.

வெள்ளீஸ்வரர் திருக்கோயில்
வெள்ளீஸ்வரர் திருக்கோயில்

மதுரையைப் போன்றதுதான் மயிலையும். இங்குள்ள 4 மாட வீதிகளும் எப்போதும் பரபரப்பாக இருக்கும். மாதந்தோறும் திருவிழா கோலம் பூண்டிருக்கும்.

இந்த மயிலாப்பூரில் மையமாக அமைந்திருக்கும் கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகில் தெற்கு மாட வீதியில் அமைந்துள்ளது இந்த வெள்ளீஸ்வரம் கோயில்.

தெற்கு பார்த்த 5 நிலை ராஜ கோபுரம், 7 கலசங்களுடன் உள்ளது. இந்தக் கோயிலில் திரும்பும் திசையெங்கும் மந்திரங்களைக் காணலாம். கோயில் கொடிமரம் பிரமாண்டமாக காட்சி தருகிறது.

இங்கு சித்தி புத்தி விநாயகப் பெருமான் காட்சித் தருகிறார். கண் சம்பந்தமான நோய்களை தீர்க்கும் ஸ்தலமாக இத்தலம் விளங்குகிறது.

காமாட்சியம்மன் சன்னதிக்கு இருபக்கமும் விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகப் பெருமான் அருள்பாலிக்கின்றனர்.

கோயில் உள்பிரகாரத்தில் பழங்காலத் தூண்களை பார்க்க முடிகிறது. இத்தலம் திருமணத் தடையை நீக்கும். திருமணம் ஆகாதவர்கள் இத்தல இறைவனை வழிபாட்டால் உடனே திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை. அதற்கு காரணம் இத்தலம் சுக்ரன் வழிபட்ட ஸ்தலம் ஆகும்.

முன்னொரு சமயம் திருமால் வாமன அவதாரம் எடுத்தபோது, மகாபலி சக்கரவர்த்திக்காக அசுர குரு சுக்ரன் வண்டு உருவம் எடுத்து வாமனரின் கமண்டலத்திற்குள் சென்றார். இதை அறிந்த திருமால், தர்ப்பையை எடுத்து கமண்டலத்திற்குள் குத்துவார். அது சுக்ரனின் கண்ணில் பட்டு கண்பார்வை பறிபோனது.

பார்வையிழந்த சுக்ரன், இத்தல இறைவனை பூஜை செய்து வழிபட்டு மீண்டும் கண்பார்வையை பெற்றதாக புராண வரலாறு கூறுகிறது. சுக்ரன் வழிபாடு செய்த லிங்கம் இப்போதும் இக்கோயிலில் உள்ளது.

சுக்ர தோஷம் இருப்பவர்கள் இக்கோயிலுக்கு வந்து இறைவனை வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இக்கோயிலில் நித்ய பூஜைகள் மிகச் சிறப்பாக நடக்கின்றன.

இந்தக் கோயிலில் மற்றொரு சிறப்பும் உள்ளது. இங்கு சப்த மாதர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருக்கும் கோயில்களில் அதீத சக்தி நிரம்பியிருக்குமாம்.

அண்ணாமலையார், துர்க்கை, பைரவர் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். இந்தக் கோயிலில் திருஷ்டி தோஷ பூஜையும் சிறப்பாக செய்யப்படுகிறது. அது ஞாயிறுதோறும் செய்யப்படுகிறது. சரபேஸ்வரருக்கு அந்த பூஜை செய்யப்படுகிறது. சரபேஸ்வரர் சிவபெருமானின் அவதாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

காரணீஸ்வரர் கோயில், தீர்த்தபாலீஸ்வரர் கோயில், விருபாட்சீஸ்வரர் கோயில், வாலீஸ்வரர் கோயில், மல்லீஸ்வரர், கபாலீஸ்வரர் கோயில், வெள்ளீஸ்வரர் கோயில் என சப்த சிவத்தலங்கள் மயிலாப்பூரில் அமைந்துள்ளன.

இக்கோயில்களை ஒரே நாளில் சுமார் மூன்று மணி நேரத்தில் தரிசிக்க முடியுமாம். இந்த 7 கோயில்களும் அருகருகே அமைந்துள்ளன.

சப்த ரிஷிகளான விசுவாமித்திரர், காசிபர், வசிஷ்டர், கௌதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர்.

வெள்ளீஸ்வரர் கோயில் பஜார் சாலையில் உள்ளது. காலை 6.00 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் இக்கோயில் திறந்திருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்