World tallest Sivan statue: உலகின் மிக உயரமான சிவன் சிலை எங்கே இருக்கு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  World Tallest Sivan Statue: உலகின் மிக உயரமான சிவன் சிலை எங்கே இருக்கு தெரியுமா?

World tallest Sivan statue: உலகின் மிக உயரமான சிவன் சிலை எங்கே இருக்கு தெரியுமா?

Manigandan K T HT Tamil
Feb 26, 2024 06:00 AM IST

Statue of belief: "நம்பிக்கை சிலை "(statue of belief) என பெயரிடப்பட்ட, ஒரு பெரிய பிரம்மாண்ட சிவன் சிலை விஸ்வஸ் ஸ்வரூபம் என்ற பெயருடன் நமது நாட்டில் உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள நம்பிக்கை சிலை
ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ள நம்பிக்கை சிலை (X)

உதய்பூரில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்த சிலை 369 அடி உயரத்தில் உள்ளது‌ .சிலை சுற்று வட்டத்தில்,அழகிய பூங்கா,நீரூற்றுகள்,ஒளி விளக்குகள்,கண்ணைக் கவரும் பல அற்புத காட்சி அனேத்தையும் கொண்ட சிறந்த ஆன்மிக சுற்றுலா தலம் எனவும் சொல்வர்.

'ப்ரொஜக்சன் மேப்பிங்', மற்றும் "விசுவலைசேஷன்" தொழில்நுட்பங்களும், லேசர் ப்ரொஜெக்டர்கள் இந்த உயரமான சிலையை அழுகுற காண்பிக்கிறது. ஒலி,ஒளி நிகழ்ச்சிகள்,சிவனின் மகிமைகள்,சாரம்,பிரபஞ்சத்தின் அதன் தொடர்புகள் என்று ,தெய்வீகத்தின், வேறொரு பரிணாமத்திற்கு நம்மை இட்டுச் செல்லும்.

இளஞ்சிவப்பு, வெண்மை, நீல நிற பின்னணியில், சிவபெருமான் மிக ரம்மியமாக காட்சி தருகிறார். முட்புதர்கள் ,புல்வெளி பிரதேசங்கள், பசுமை மாறா காடுகள், அழகிய வீடுகள், நகரமைப்பு அனைத்தையும் மலையில் இருந்து காணுவது ஒரு புதிய அனுபவம். இரவின் ஒளியில் அதன் பரிமாணம் எதோ நட்சத்திரக் கூட்டம் பூமியிலிறங்கியது போன்ற அற்புதம் சுகானுபவமே!

சிவபெருமான் அமர்ந்த நிலையில், கால்களை குறுக்காகவும், இடது கையில் சூலத்தை ஏந்தியவாறு, இடது பாதம், வலது பாதத்தில் மேல் இருப்பது போலவும், முகம் தியான பாவத்திலும், ஒரு வகை இளம் சிவப்பு சிலை உயிரோட்டத்துடன் உள்ளது.

20 கிமீ தூரம்வரை தெரியும் பிருமாண்ட சிவன் சிலை, உட்புறமாக லிஃப்ட் எனும் தானியங்கி வசதி உள்ளது. இதில் ஏறி,தோள் பட்டை வரை சென்றிறங்கி, மற்றொரு பக்க தோளுக்கு செல்வதற்கு, கண்ணாடி இழைகளிலிலான, பாலம் கட்டப்பட்டுள்ளது. இதில் நடப்பதே ஒரு சுகமான அனுபவம்.

"தோளோடு தோளினை தொடர்ந்து நோக்குரின், நாள் பல கழியுமாம் " என்ற ராமாயண வரிகள் நினைவுக்கு வருகிறது.

சிவபெருமானின் தலை முடி வரை சென்று அங்கிருந்து ஜல அபிஷேகம் செய்ய அனுமதி உண்டு. இதை அமைக்க சுமார் 10 ஆண்டு ஆனதாம். திரவமாக்கப்பட்ட துத்தநாகம், தாமிரம் போன்ற உலோகக் கலவைகள் கொண்டு அமைக்கப்பட்ட, சிலையின் உட்புறம், கண்காட்சி அரங்கம், பொது உபயோக, யோக, தியான கூடங்களும் உண்டு. 15 ஏக்கர் பரப்பில் பார்க்கிங், கடைகள் போன்ற பலவும் உள்ளன.

இசை நீரூற்றுகள், குளம், உள்ளூரில் சுற்றி பார்க்க, ஒரு மினி ரயில், இதுபோல பல சுவாரசியமான விஷயங்கள் இங்கு இருக்கின்றன. பக்தி நிறைந்த சூழல், சிவனாரின் தாளங்கள் ஒலித்துக் கொண்டே இருக்க, அமைதியான ஆச்சர்யம் அங்கே நின்று நிலவுவது கண்கூடு. இங்கு 4 லிப்ட், படிக்கட்டுகள் அனைத்தும் உண்டு. 25 அடி உயரமுள்ள கணநந்தியும் உள்ளது. 250கிமீ காற்றின் வேகத்தையும், நிலநடுக்கங்களையும் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

"அண்ட் பிருமாண்ட கோடி

அகில பரிபாலனா

பூர்ணா ஜகத்காரனா

சத்யதேவ தேவ ப்ரியா

வேத வேதார்த்த சாரா.."

என்கின்ற

"சகல லோகாய

சர்வ பூதாய

சத்யசாக்ஷாத்கரா

சம்போ சம்போ சங்கரா"

எனும் ஒப்பற்ற பாடல் வரிகள் காதுகளில் ரீங்காரமிட, பிரமிப்பு கலையாமல், பக்தர்கள் அங்கிருந்து பார்த்து, தரிசித்து, திரும்புவது வாடிக்கையான தொரு அற்புத நிகழ்வே!

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார், சென்னை

தொடர்புக்கு: manivks47@gmail.com

பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.

Whats_app_banner

டாபிக்ஸ்