HT Temple SPL: வியக்க வைக்கும் அதிசயம் வியட்நாம் 'டிரான் குவோக் பகோடா' கோயில்!
Vietnam Temple: வியட்நாம் நாட்டில் அமைந்துள்ள டிரான் குவோக் பகோடா ஆலயத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இங்கு காணலாம்.
வியட்நாமில் உள்ள மிகப்பழமையான கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது டிரான் குவோக் பகோடா. வியட்நாமின் ஹனோய் நகரத்தில் நியென் என்ற இடத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது.
சுமாா் 1,500 ஆண்டு கால வரலாற்றைக் கொண்ட இந்த ஆலயம், ஹாங் ஆற்றின் கரையில் இருந்து சில அடி தூரம் ஆற்றிற்குள் அமைந்திருக்கிறது. இந்த திருக்கோயில் பார்ப்பதற்கு ஒரு தீவுக்குள் இருப்பது போல் ரம்மியமாக காட்சி அளிக்கும். இது வியட்நாமில் உள்ள புத்த மதத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. இன்றும் ஹனோய் தலைநகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
ஹனோய் ஆற்றின் உள்ளே அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயத்திற்குக் செல்லும் வழியானது மிகவும் ரசனைக்குரியது. வளைந்து நெளிந்து ஆற்றிற்குள் செல்லும் பாதை, நமக்கு புதிய புத்துணா்ச்சியை தரும். பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்ட இந்த ஆலயம் 17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் 'டிரான் குவோக்' என்று பெயரிடப்பட்டது.தூபமிடக்கூடிய அழகிய முற்றத்தையும் கொண்ட ஆற்றின் நடுவில் உள்ள இந்த ஆலயத்தை அடைவதற்காக அமைக்கப்பட்ட சாலைகளில் சிவப்பு ஓடுகள் பதிக்கப்பட்ட பகுதியின் வழியாகத் தான் நடந்து செல்ல வேண்டும்.
இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பம்சம், 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோபுரங்களுக்கு இடையே காணப்படும் கல்லறை கோபுரம் ஆகும். இது 15 மீட்டா் உயரத்துடன் பதினோறு தளங்களைக் கொண்டது. தாமரை மலர் விரிந்தது போல் இருக்கும் இந்த கோபுரமானது 1998 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோபுரத்தின் ஒவ்வொரு தளத்திலும் 6 நுழைவு பகுதிகள் காணப்படுகின்றன. இந்த கோபுரத்தின் ஒவ்வொரு அறையிலும் விலைமதிப்புமிக்க கற்களால் வடிக்கப்பட்ட புத்தா் சிலை இருக்கிறது. இந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்திருக்கும்.
பொதுவாக வியட்நாம் மற்றும் ஹனோயின் வளர்ச்சியில் டிரான் குவோக் பகோடா முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இந்த கோயிலுக்கு வருகை தருகிறார்கள். குறிப்பாக வியட்நாமிற்கு சுற்றுலா வருவோரின் விருப்பமாகவும் இந்த கோயில் திகழ்கிறது.
பழமையான கோயில்களைக் கொண்ட ஹனோய் எப்போதும் புத்த மதத்தினருக்கு ஒரு சிறந்த இடமாக உள்ளது. பெரும்பாலான பழைய கோயில்கள் மேற்கு ஏரியைச் சுற்றி அமைந்துள்ளன. குறிப்பாக, நீங்கள் புத்த மதத்தில் ஆர்வமாக இருந்தால், ஹனோயில் உள்ள மிகப் பழமையான டிரான் குவோக் கோயிலை பார்வையிடலாம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / நூல்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்