அயோத்தி ஸ்ரீராமருக்கும் தூத்துக்குடிக்கும் உள்ள தொடர்பு என்ன?.. வியக்க வைக்கும் தகவல்கள்!-special story about ramar link with kayathar kothanda rameswarar temple - HT Tamil ,ஜோதிடம் செய்திகள்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அயோத்தி ஸ்ரீராமருக்கும் தூத்துக்குடிக்கும் உள்ள தொடர்பு என்ன?.. வியக்க வைக்கும் தகவல்கள்!

அயோத்தி ஸ்ரீராமருக்கும் தூத்துக்குடிக்கும் உள்ள தொடர்பு என்ன?.. வியக்க வைக்கும் தகவல்கள்!

Karthikeyan S HT Tamil
Jan 22, 2024 11:58 AM IST

Ram Temple: அயோத்தியில் ராமர் கோயிலில் இன்று பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் ராமருக்கும் தொடர்பு இருந்துள்ளதாக புராணங்களில் சொல்லப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கிறது.

அயோத்தி ராமர் சிலை, கோதண்ட ராமேஸ்வரர் ஆலயம், கயத்தாறு.
அயோத்தி ராமர் சிலை, கோதண்ட ராமேஸ்வரர் ஆலயம், கயத்தாறு.

அதாவது, சீதையை மீட்க ராமர் இலங்கைக்கு செல்லும் வழியில் 'திருஆறை' என்று அழைக்கப்பட்ட இன்றைய கயத்தாறு கோயிலில் தங்கி சிவனை வழிபட்டதாகவும், தன் அம்பினால் நிலத்தை கீறி ஒரு கோடு உண்டாக்கி அதிலிருந்து ஒரு தீர்த்தம் உருவாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. பின் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு பின் சிவபெருமானிடம் இருந்து கோதண்டம் என்ற ஆயுதத்தை பெற்றுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான், கோதண்ட ராமேஸ்வரர் என்று இத்திருக்கோயில் அழைக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் வீரபாண்டிய கட்டமொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்துக்கு அருகே அமைந்துள்ளது இக்கோயில். மிகப் பழமையான இக்கோயில் ராமாயண காலத்தைச் சேர்ந்தது என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரத்திற்கு முந்திய கோயில் என திருஆறை புராணம் கூறுகிறது. இதற்கு மேலும் ஆதாரமாக ராமபிரான் லிங்க பூஜை செய்யும் புடைப்புச் சிற்பமும் இங்கு உள்ளது.

மேலும், அம்பு நிலத்தைக் கீறியதில் உள்ளிருந்து ஊற்று ஒன்று பெருகி வந்து ஆறாக ஓடத் தொடங்கியது. அந்த ஆறு 'கசந்த ஆறு’ என்று அழைக்கப்பட்டது. அதுவே அந்த ஊரின் பெயராகவும் ஆனது. அதுவே காலப்போக்கில் மருவி 'கயத்தாறு' என்றானதாகவும் கூறப்படுகிறது.

ஊற்று ஏற்படுத்த கோதண்டத்தை ராமர் வளைத்த போது, ஸ்ரீராமருடைய பாதங்கள் அழுந்திய பாறையில் அவருடைய இரு பாதங்கள் பதிந்து இருப்பதாக தல புராணம் சொல்கிறது. அந்தப் பாறையில் உள்ள ராமர் பாதத்தை இன்றும், பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபாடு செய்து வருகிறார்கள். பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னர் நாயக்கர்களால் மேம்படுத்தப்பட்டது. இத் திருக்கோயிலின் முன்புறம் உள்ள சிற்றாறு எந்த வறட்சியிலும் வற்றாத ஊற்றாக ராமர் பாதம் உள்ள பாறையிலிருந்து ஊற்று நீர் ஓடி வருவது தனிச்சிறப்பாகும். மேலும், இந்த ஆறு வடக்கில் இருந்து தெற்காக ஓடுவது மற்றொரு தனிச் சிறப்பாகும்.

இதேபோல், ராமர் தனது பரிவாரங்களுடன் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வழியாக சென்றதாகவும், உடன் வந்த பாண்டவர்கள் இங்கு தங்கியதால் பாண்டவர்மங்கலம், மந்திகள் வந்து தங்கிய தால் மந்தித்தோப்பு என்றும் அருகில் உள்ள சிற்றூர்கள் பெயர் பெற்றன என்ற சுவாரஸ்ய குறிப்பும் இந்த ஊர்களுக்கு இருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயிலில் இன்று பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்திற்கும் ராமருக்கும் தொடர்பு இருந்துள்ளதாக புராணங்களில் சொல்லப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பாக அமைந்திருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9