HT Temple Special: 1500 ஆண்டுகள் பழமை..பித்ருதோஷம் உள்ளவர்கள் கண்டிப்பாக தரிசிக்க வேண்டிய ஆலயம்!
Parithiappar Swamy: தமிழ் மாத வளர்பிறை முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சுவாமியை தரிசித்தால் பித்ருதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் வழியில் உள்ள மேலஉளூர் கிராமம் அருகே அமைந்துள்ளது பரிதிநியமம் பரிதியப்பர் ஆலயம். இத்தலம் பாஸ்கரேசுவரர் என்றும் அழைக்கப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
பரிதி என அழைக்கப்படும் சூரிய பகவான் ஒருமுறை கொடிய நோயினால் பாதிக்கப்பட்டார். நோயிலிருந்து தன்னை காக்க சிவனிடம் வேண்டியுள்ளார். சிவபெருமானின் அறிவுரைப்படி இங்கு வந்தவர் தீர்த்தம் உண்டாக்கி சிவலிங்கம் அமைத்து பூஜை செய்து வந்துள்ளார். இதன் மூலம் அவரது நோய் நீங்கியது. இதனால் இங்கு சுவாமி பரிதியப்பர், பரிதீசர், பாஸ்கரேஸ்வரர் என அழைக்கப்பட்டார்.
பிற்காலத்தில் இந்த சிவலிங்கம் பூமியில் புதைந்தது. ராமபிரானின் முன்னோர்களான சூரிய குலத்தில் தோன்றிய சிபி சக்கரவர்த்தி காலத்தில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் சிவத்தலங்கலை தரிசித்து வரும்போது ஒருநாள் இந்த ஆலயத்தில் இளைப்பாறினாா். அந்தநேரத்தில் இவரது குதிரைச்சேவகன் புல் சேகரிக்க நிலத்தை தோண்டி இருக்கிறார். அப்போது பூமிக்குள் இருந்த லிங்கத்தின் மீது பட்டது. உடனே ரத்தம் பீறிட்டு கொட்டியது. இதையறிந்த சிபி சக்கரவர்த்தி மன்னன் அதற்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். இதை நினைவு படுத்தும் வகையில் இன்றும் கூட சிவலிங்கத்தில் ரத்த வடு உள்ளது. இப்படி சூரிய பகவனால் அமைக்கப்பட்ட லிங்கம், சிபி சக்கரவர்த்தி மூலம் உலகிற்கு தெரியவந்தது.
சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் சிவலிங்கம் எதிரே சூரிய பகவான் நின்று சிவதரிசனம் செய்யும் காட்சியை வேறு எந்த தலத்திலும் காண முடியாது. இந்த லிங்கம் மீது சூரியனின் ஒளிக்கதிர்கள் பங்குனி 18,19,20 தேதிகளில் விழுகிறது. சிவனின் பின்புறம் கோஷ்டத்தில் மகாவிஷ்ணுவும், ஆஞ்சநேயரும் அருகருகே சன்னதிகள் உள்ளது. அம்பாள் மங்காளம்பிகைக்கு தனிச்சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
பித்ருதோஷம் உள்ளவர்கள் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சித்திரை, ஆவணி, ஐப்பசி மாதத்தில் பிறந்தவர்கள், சூரிய திசை நடப்பவர்கள், சிம்ம ராசி, லக்னத்தில் பிறந்தவர்கள் ஆகியோர் அவசியம் தரிசிக்க வேண்டிய தலம். இவர்கள் தமிழ் மாத வளர்பிறை முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று சுவாமியை தரிசித்தால் தோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை. இவ்வாலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / ஆன்மிக நூல்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்