தமிழ் செய்திகள்  /  Astrology  /  Special Story About Mullaivananatha Swamy Temple, Thirukkarugavur

HT Temple SPL: குழந்தை பாக்கியம் கிடைக்கும்..கருவை காத்தருளும் கருகாத்த நாயகி அம்மன்!

Karthikeyan S HT Tamil
Jan 17, 2024 05:30 AM IST

Mullaivananathar Temple: சுயம்பு லிங்கமாகத் தோன்றிய மூலவரைத் தவிர இங்குள்ள நந்தியும், தலவிநாயகரான கற்பகவிநாயகரும் சுயம்புவாகத் தோன்றியவர்கள். பங்குனி மாதப் பெளர்ணமி அன்று சந்திரனின் ஒளி சிவலிங்கத் திருமேனியில் படுவது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

முல்லைவனநாதர், கருகாத்த நாயகி கோயில், திருக்கருகாவூர்.
முல்லைவனநாதர், கருகாத்த நாயகி கோயில், திருக்கருகாவூர். (HRCE )

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ் பரப்பிய நாயன்மார்களுள் திருஞான சம்பந்தர், மாணிக்கவாசகர் பாடல் பெற்ற சிறப்பு மிக்க பிரார்த்தனை ஸ்தலமாகும். இத் திருக்கோயில் கருவறைக்குள் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார் சுவாமி முல்லைவனநாதர். சுயம்புவாகத் தோன்றியவர். விநாயகர், நந்தி மூவரும் சுயம்பு வடிவமாக உள்ளனர்.

கருவறையில் புற்று மண்ணால் ஆன சுயம்பு மூர்த்தியாக சிவலிங்கம் உள்ளது. சுவாமியைச் சுற்றி முல்லைக்கொடி படர்ந்திருந்த வடுவை இப்போதும் தரிசிக்கலாம். தலவிருட்சம் முல்லை என்பதால் சுவாமிக்கு முல்லைவனநாதர் என்பது திருநாமம். சுயம்புவாக தோன்றியவர் என்பதால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. வளர்பிறை பிரதோஷம் அன்று புனுகு சட்டம் மட்டுமே சாத்தி வழிபடுவதே சிறப்பு.

சுவாமி சன்னதிக்கு இடது புறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது அம்பாள் கருகாத்த நாயகி கோயில். திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபட்டால் குழந்தைபேறு உண்டாகும். கருச்சிதைவு ஏற்படாது, புத்திர பாக்கியம் தொடர்பான தோஷங்கள் ஏற்படாது.குழந்தை பேறு வேண்டி இங்கு வழிபடுவோர் அம்பாள் சன்னதியை நெய்யினால் படிமெழுகி கோலமிட்டு அர்ச்சனை செய்கின்றனர்.

மீதமுள்ள நெய்யை அம்பாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொடுப்பார்கள். இந்த நெய் பிரசாதத்தை தம்பதியர் 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புத்திரபாக்கியம் உண்டாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் பாதத்தில் வைத்து மந்திரித்த விளக்கெண்ணை வலி ஏற்படும் போது வயிற்றில் தடவினால் எந்தவிதமான கோளாறு இல்லாமல் சுகப்பிரசவம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. பிரார்த்தனை நிறைவேறியதும் குழந்தையின் எடைக்கு ஏற்ப துலாபாரமாக தானியங்களை செலுத்துகின்றனர். குழந்தை பேறு கிட்டவும், திருமணம் நடைபெறவும் அம்பாள் கருகாத்த நாயகியை பக்தர்கள் போற்றி வணங்குகின்றனர்.

சுயம்பு லிங்கமாகத் தோன்றிய மூலவரைத் தவிர இங்குள்ள நந்தியும், தலவிநாயகரான கற்பகவிநாயகரும் சுயம்புவாகத் தோன்றியவர்கள். பங்குனி மாதப் பெளர்ணமி அன்று சந்திரனின் ஒளி சிவலிங்கத் திருமேனியில் படுவது இத்தலத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்