தமிழ் செய்திகள்  /  Astrology  /  Special Story About Annur Manneeswarar Swamy Temple

HT Temple SPL: 1800 ஆண்டுகள் பழமை.. கஷ்டங்கள் தீர்க்கும் அன்னூர் மன்னீஸ்வரர் சுவாமி!

Karthikeyan S HT Tamil
Jan 12, 2024 06:00 AM IST

Manneeswarar Temple: கருடன் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கீழே இருக்கும் சிறிய பொருளையும் கவனிக்கும் திறமை கொண்டது. அதுபோல மனிதர்களின் பாவ புண்ணியங்களை இந்த மன்னீஸ்வரர் எப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்பதை இந்த சுவாமி உணர்த்துவதாக நம்பிக்கை.

அன்னூர் மன்னீஸ்வரர் கோயில்
அன்னூர் மன்னீஸ்வரர் கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

நாயன்மார்களில் ஒருவரான திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தேவார வைப்புத்தலம் இதுவாகும். இப்பகுதியை ஆண்ட மன்னர்களின் வரலாறுகளை அறிய இக்கோயிலில் 51 கல்வெட்டுக்கள் உள்ளன. இங்கு மன்னீஸ்வரர் கைலாச விமானத்தின் கீழ் சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். இங்குள்ள அம்மன் அருந்தவச்செல்வி தனி சன்னதியில் அருள் செய்கிறாள்.

பைரவர், குருபகவான், நடராஜர், வள்ளி, தெய்வானையுடன் முருகன், பிரம்மா, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், ஆஞ்சநேயர், நால்வர், அறுபத்து மூவா், திருநீலகண்ட நாயனாருக்கு சன்னதிகளும் உள்ளன. இக்கோயிலின் ஈசானி மூலையில் சனி பகவானுக்கும், கால பைரவருக்கும் தனி சன்னதி அமையப்பெற்றுள்ளது. இவ்விடம் உள்ள சனி பகவானை வழிபட்டால் ஏழரை சனி, அஷ்டம சனி தாக்கம் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

முன்பு காடாக இருந்த இப்பகுதியில் 'அன்னி' என்ற வேடன் வசித்து வந்தான். பறவை, விலங்குகளை வேட்டையாடி சாப்பிடுவது பாவம் எனக் கருதிய அவன், அந்தப் பகுதியில் கிடைக்கும் காய்கறிகள், கிழங்குகள், பழங்களை சாப்பிட்டு வந்தான். ஒருநாள் வழக்கம் போல் பூமியில் கிடைக்கும் கிழங்கினை உணவிற்காக எடுக்கும்போது அதிலிருந்து ரத்தம் பீறிட பயந்துபோய் மன்னனிடம் தெரிவித்துள்ளான். அங்கு சென்று பள்ளத்தில் இருந்ததை சங்கிலிகளைப் பினைத்து யானையை வைத்து இழத்தும் வெளியே ஏதும் வராததால் சோர்வடைந்த மன்னனோ அத்திட்டத்தை கைவிட்டார். அப்பொழுது வானில் பறந்த வந்த ஓர் உருவம் இவ்விடத்தில் எம்பெருமான் சிவன் சுயம்பு வடிவாக உள்ளதாக கூறி மறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு பூஜைகள் செய்து தோன்றிய நிலையில் அங்கிருந்து லிங்கமாக வெளிப்பட்டார் எம்பெருமான். பிறகு ராஜ குருவின் ஆலோசனைப்படி அம்மன்னனால் கட்டப்பட்ட கோயில் தான் அன்னூர் மன்னீஸ்வரர் கோயில்.

இவ்வாலத்தில் உள்ள எம்பெருமான் மன்னனை மன்னித்தமையால் மண்ணீஸ்வரர் என்று அழைக்க பெற்றார். மூலவராக எம்பெருமான் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பதால் இங்கு சிவபெருமானை தரிசித்தால் ஆயிரம் சிவாலயங்களை தரிசித்த பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். கருவறையில் உள்ள சுவாமி மணல் நிறத்தில் உள்ளாா். லிங்கத்தின் இரண்டு புறமும் பறவைக்கு இறக்கை இருப்பது போன்ற வடிவத்தில் உள்ளது. உற்று நோக்கிப் பார்த்தால் கருடன் தனது இறக்கைகளை மடக்கி வைத்து அமா்ந்திருப்பது போல காட்சியளிக்கும்.

கருடன் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கீழே இருக்கும் சிறிய பொருளையும் கவனிக்கும் திறமை கொண்டது. அதுபோல மனிதர்களின் பாவ புண்ணியங்களை இந்த மன்னீஸ்வரர் எப்போதும் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்பதை இந்த சுவாமி உணர்த்துவதாக நம்பிக்கை. இதுவரை செய்த பாவங்களை மன்னித்து விடுவார் என்பதும் பக்தர்களின் நம்பிக்கை. லிங்கத்தின் மேற்பகுதியில் சங்கிலியால் கட்டி இழுத்த தடமும், உச்சியில் வேடனது கோடரியால் வெட்டுப்பட்ட இடம் மழுங்கியும் இருக்கிறது.

மன்னீஸ்வரரை தொழில், வியாபாரம் சிறப்படையவும், முன்ஜென்ம வினைகள் தீரவும் வழிபடுவது சிறப்பு. சிவன், அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் செய்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். மார்கழியில் பிரம்மோற்ஸவம்,சித்திரைப் பிறப்பு, வைகாசி பூஜை, மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, சிவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி தினங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

2024 ஜோதிட பலன்கள்

புத்தாண்டு ராசி பலன்கள், பண்டிகைகள், வாழ்த்துக்கள் மற்றும் பலவற்றை இங்கே படிக்கலாம்.

டாபிக்ஸ்