Yogi Ram Surat Kumar: மகான் ராம்சுரத் குமார் முக்தி அடைந்த நாள் - அவர் அருளிய வாழ்வியல் தத்துவங்கள்!
யோகி ராம்சுரத்குமார் முக்தி அடைந்தநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

யோகி ராம் சுரத்குமார், திருவண்ணாமலையில் ஆசிரமத்தை அமைத்து பக்தர்களுக்கு ஞான யோகத்தை ஊட்டியவர். விசிறி சாமியார் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டார். யோகி ராம் சுரத்குமார், தனது 82ஆவது வயதில் பிப்ரவரி 20ஆம் தேதி முக்தி அடைந்தார்.
யார் இந்த யோகி ராம்சுரத் குமார்?: உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசிக்கு அருகில் இருந்த நார்தாரா என்னும் கிராமத்தின் அருகே பல்லியா என்ற கிராமத்தில் 1918ஆம் ஆண்டு, டிசம்பர் 1ஆம் தேதி அவதரித்தார்.
அப்போது காளயுக்தி ஆண்டு, கார்த்திகை மாதம் 11ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை சுவாதி நட்சத்திரத்தில் இருந்தது. ராம்சுரத் குமாரின் தந்தையின் பெயர் ராம்தத் குமார், தாயாரின் பெயர் குசும்பதேவி ஆவார். இவரது மூத்த சகோதரரின் பெயர் மரைக்கன் குவார், இளைய சகோதரரின் பெயர் ராம்தகின் குவார் ஆகும்.
பால்யகாலத்தில் கங்கை ஆற்றங்கரையிலும், வீட்டின் அருகில் சுற்றித்திரிந்த ஆன்மிகவாதிகளின் நட்பினையும் பெற்றார். தனது சிறு பருவத்தில், ஸ்ரீஸ்ரீ1008 கபாடியா பாபா என்னும் ஆன்மிகவாதியைச் சந்தித்தார். அப்போது அவர் பாரத தேசத்தின் தென்மாநிங்களுக்குச் சென்று, ஆன்மிகத்தைத் தேடு என கட்டளையிட்டார்.
அப்போது திருமணம் எல்லாம் ஆகி இருந்ததாகக் கூறுகின்றனர். இருப்பினும் லெளகீக வாழ்க்கையில் இருந்து சிறிதுகாலத்தில் வெளியேறி, ஞானயோகத்தைச் சொல்லித்தரும் குருவைத் தேடி அலைந்தார்.
இந்த ஞானத்தேடலுக்காக 1952ஆம் ஆண்டு முதல் 1959ஆம் ஆண்டு வரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணப்பட்டார். அக்காலத்தில் யாசகத்தை வயிற்றுப்பிழைப்புக்காக செய்து வந்தார், யோகி ராம் சுரத்குமார்.
இறுதியில் ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்திலும், ரமண மகரிஷியின் ஆசிரமத்திற்கும் சென்று, அந்த மகான்களை தரிசித்தார். அதன்பின்னர், கேரளாவில் இருக்கும் ராமதாசரின் ஆசிரமத்துக்குச் சென்று பக்தி நெறியைப் பயின்றார்.
குறிப்பாக சொல்லப்போனால், ஸ்ரீ அரவிந்தர், ரமணமகரிஷி, ராமதாசர் ஆகிய மூவரையும் தனது ஆன்மிக வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டார். அதன்பின், ‘ஓம் ஸ்ரீராம் ஜெய்ராம்’ என்னும் மந்திர தீட்சையை ராமதாசரிடம் இருந்துபெற்றார், ராம் சுரத்குமார். இதையே தன் வாழ்நாள் முழுக்க அடிக்கடி உச்சரித்துக்கொண்டே இருந்தார்.
கடைசியாக 1959ஆம் ஆண்டு திருவண்ணாமலை வந்த அவருக்கு அங்கிருந்தவர்கள், தங்க இடம் கொடுத்தனர். அதன்பின், அவர் எங்கும் செல்லவில்லை.
அதன்பின், திருவண்ணாமலை அக்ரஹாரக் கொல்லை அருகே, ஆசிரமத்தை உருவாக்கி பக்தர்களுக்கு ஆன்மிக ஞானத்தையும் வாழ்வியல் கோட்பாடுகளையும் சொல்லிக்கொண்டிருந்தார். இறுதியாக யோகி ராம் சுரத்குமார், தனது 82ஆவது வயதில் பிப்ரவரி 20ஆம் தேதி முக்தி அடைந்தார்.
யோகி ராம்சுரத் குமார் சொன்ன தத்துவங்கள்:
- எங்கு நம்பிக்கையிருக்கிறதோ அங்கு விதி விளையாடாது
- குருவின்மேல் யாருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதோ, அவர்களை விதியின் விளையாட்டு பாதிக்காது.
- இதோ இந்த மாமரத்தைப் பார். இதன் அடியிலுள்ள வேர்கள், கிளைகள், இலைகள், பூக்கள், காய்கள், கனிகள் எல்லாம் சேர்ந்து ஒரே மரமாய் இருக்கின்றது. அது போல், இந்த பிரபஞ்சத்தில் இருப்பதை எல்லாம் இணைத்து ஒரே ஒரு பரம்பொருளின் முழுமையாகத் திகழ்கிறது.
- கடவுளைப்பற்றி ஒருமுகப்பட்ட மனம் வேண்டும் என்றால், மனம் எங்கெங்கு அலைகிறதோ, பார்வை எங்கெங்கு திரும்புகிறதோ, அங்கெல்லாம் அவரே இருக்கிறார் என்று நினைவில் கொள்ளவேண்டும். அவரே எல்லாமுமாய் இருக்கிறார்.
- ஆசைகளை குறைத்துக் கொண்டே வா; மிகச் சில தேவைகளோடு வாழப் பழகிக்கொள்.எத்தனைக்கு எத்தனை ஆசைகளை குறைத்துக்கொள்கிறாயோ, அத்தனைக்கு அத்தனை வாழ்வில் மகிழ்ச்சியுறுவாய்!
- உடலை மட்டும் பலப்படுத்துவதால் எந்தப் பயனும் இல்லை. உன் ஆன்மாவையும் தெய்வீகத் தன்மையையும் பலப்படுத்து!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்