Kala Bhairavar Temple: உலகிலேயே மிகப் பெரிய பைரவர் சிலை - கடன் பிரச்னைகளை தீர்க்கும் தென்னகத்து காசி கால பைரவர்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Kala Bhairavar Temple: உலகிலேயே மிகப் பெரிய பைரவர் சிலை - கடன் பிரச்னைகளை தீர்க்கும் தென்னகத்து காசி கால பைரவர்

Kala Bhairavar Temple: உலகிலேயே மிகப் பெரிய பைரவர் சிலை - கடன் பிரச்னைகளை தீர்க்கும் தென்னகத்து காசி கால பைரவர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Aug 19, 2023 05:48 PM IST

காசியில் இருக்கும் அதே அமைப்பில் அமைந்திருக்கும் பைரவர் கோயிலாக ஈரோடு அருகே அமைந்திருக்கும் கால பைரவர் கோயில் உள்ளது. இதனை மக்கள் தென்னகத்து காசி என்றே அழைக்கிறார்கள்.

ஈரோடு அருகே அமைந்திருக்கும் தென்னகத்து காசி கால பைரவர் கோயில்
ஈரோடு அருகே அமைந்திருக்கும் தென்னகத்து காசி கால பைரவர் கோயில்

இது போன்ற போட்டோக்கள்

சிவபெருமான் கோயில்களில் முதல் வழிபாடு விநாயகருக்கும், நிறைவு வழிபாடு பைரவருக்கும் நடைபெறும்.

சிவனின் அவதாரங்களின் ஒன்றான சொர்ண ஆகர்ஷணவாக பைரவர் கருதப்படுகிறார். இவருக்கு 63 குழந்தைகள். இவர்களில் முதல் குழந்தை கால பைரவர். கால பைரவருக்கு தமிழ்நாட்டில் தனி கோயில்கள் உள்ளன.

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே ராட்டை சுற்றிப்பாளையம் என்ற பகுதியில், கால பைரவருக்கு என தனி கோவில் உள்ளது. தென்னக காசி என்று அழைக்கப்படும் இந்த பைரவர் கோயிலில் 39 அடி உயரமும், 18 அடி அகலமும் கொண்ட பிரமாண்ட உருவ சிலையில் தனது நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார். அவரது கரங்களில் உடுக்கை, வேல், சூலம், அட்சயபாத்திரம் தாங்கி, தனது வாகனமான நாயுடன் அருள்பாலிக்கிறார்.

'உலகிலேயே மிக உயரமான பைரவர் சிலை' என இந்த கோயிலில் இடம்பெற்றிருக்கும் பைரவர் சிலைக்கு யுனிக் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்ட் சான்றிதழ் வழங்கியுள்ளது.

சிவபெருமானின் 64 வகையான வடிவங்கள் ஒன்றாக இருந்து வரும் பைரவருக்கும், 64 வகையான வடிவங்கள் இருப்பதாக புராணங்களில் சொல்லப்படுகின்றன. இந்த கோயிலில் தியானம் செய்வதற்கு என அமைக்கப்பட்டிருக்கும் மண்டபத்தை சுற்றி வெளிப்புற பகுதியில், பைரவரின் 64 வடிவங்களில் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கோயிலின் கருவறையில் 5 அடி உயரத்தில் மூலவராக பைரவமூர்த்தி எழுந்தருளியுள்ளார். அவருக்கு முன்பாக சொர்ண லிங்கம் மற்றும் நந்தி பகவான் இருவரும் காட்சி தருகிறார்கள்.

இந்த கோயிலில் வரும் பக்தர்கள் கருவறைக்குள் சென்று, அங்குள்ள சொர்ண லிங்கம், பைரவ நந்தியை தொட்டு வணங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

காசியில் உள்ள பைரவர் கோயிலில் இருப்பது போல் இந்த கோயிலிலும் கீழ்புறத்தில் மயானமும், வடபுறத்தில் நீரோடையும் உள்ளதால் இதனை தென்னக காசி என்று பக்தர்கள் சிறப்பித்து அழைக்கிறார்கள்.

பக்தர்களின் கடன் பிரச்னையை தீர்க்கும் தலமாக விளங்கும் இந்த கோயிலில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மண்விளக்கு பூஜை நடைபெறுகிறது. உடலில் ஏற்படும் நோய், நொடிகள் நீங்கவும் இங்குள்ள பஞ்சலோக பைரவருக்கு நெய் அபிஷேகம் செய்யப்படுகிறது.

ஈரோட்டில் இருந்து காங்கேயம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு செல்ல ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.