Tamil News  /  Astrology  /  Shiva Temple Built By Boothaganangal Do You Know Where Is It Located In Tamilnadu

HT Temple Special: பூதகணங்களால் கட்டப்பட்ட சிவாலயம்.. சிறிய கோயில், பிரமிப்பு தரும் கட்டட கலை!

Manigandan K T HT Tamil
May 25, 2023 05:50 AM IST

Shivan Temple in Tamilnadu: தங்கள் தவறை உணர்ந்து சிவபெருமானை நோக்கி பூதகணங்கள் கடுந்தவம் புரிந்தன. இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான், பூதகணங்களுக்கு காட்சி கொடுத்து, தவறை மன்னித்தார்.

பூதபுரீஸ்வரர் கோயில்
பூதபுரீஸ்வரர் கோயில்

ட்ரெண்டிங் செய்திகள்

தென்னாட்டில் இறைவன் சிவபெருமானுக்கு எண்ணிலடங்கா கோயில்கள் உள்ளன. அவை வரலாற்றைத் தாங்கி நிற்கும் கோயில்களாக இன்று தாங்கி நிற்கின்றன.

பூதகணங்களால் சிவனுக்கு ஆலயம் எழுப்பப்பட்ட வரலாறு பெரும்பாலனவர்கள் அறிந்திராத ஒன்றாகும். இந்தக் கோயில் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ளது.

மிகச் சிறிய கோயில் தான். ஸ்ரீபெரும்புதூர் என்றதும் ராமானுஜர் ஆலயம் நினைவு வரலாம். ஆனால், அதே ஊரில் சிவாலயமும் உள்ளது. வைணவமும், சைவமும் பின்னிப் பிணைந்து இருந்ததற்கு இந்த ஊரில் உள்ள இரு கோயில்களே சாட்சி.

இக்கோயில் உருவானது குறித்து வரலாறை தெரிந்து கொள்வோம் வாருங்கள். ஒரு முறை சிவபெருமானின் ஆனந்த தாண்டவத்தின்போது அவரது ஆடைகள் நெகிழ்ந்ததாகவும் அதைக் கண்டு பூத கணங்கள் சிரித்ததாகவும் இதனால், கோபம் கொண்ட சிவபெருமான் கையிலாத்தை விட்டு பூதகணங்களை அகலுமாறு உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

தங்கள் தவறை உணர்ந்து சிவபெருமானை நோக்கி பூதகணங்கள் கடுந்தவம் புரிந்தன. இதனால் மனம் குளிர்ந்த சிவபெருமான், பூதகணங்களுக்கு காட்சி கொடுத்து, தவறை மன்னித்தார்.

தங்களை மன்னித்த சிவபெருமானுக்கு கோயில் எழுப்ப பூதகணங்கள் விரும்பின. சிவபெருமானின் அனுமதியுடன் பூதகணங்கள் கோயில் எழுப்ப முயன்றன. அப்போது தடை ஏற்பட்டதை தொடர்ந்து, பரிகாரமாக ஜெயபூத விநாயகர் ஆலயம் கட்டிவிட்டு, பின்னர் சிவபெருமானுக்கு இந்த கோயிலை எழுப்பினர்.

அந்தக் கோயில் தான் இன்று ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பூதபுரீஸ்வரர் கோயிலாக திகழ்கிறது. பூதங்களால் உருவாக்கப்பட்டதால் இந்த இடம் பூதபுரி என்றும் பஞ்ச பூதங்கள் வழிபடுவதால் பூதூர் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.

கோயில் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள மரங்கள், பூச்செடிகள்
கோயில் சுற்றுப் பிரகாரத்தில் உள்ள மரங்கள், பூச்செடிகள்

ஊர் பெரியதாகையால் பெரும்பூதூர் என்றும் மங்களகரமாக இருக்க ஸ்ரீ பெரும்புதூர் என்றும் பெயர்பெற்றிருக்கிறது.

ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இக்கோயில், வீடுகளுக்கு மத்தியில் இருக்கிறது. இறைவி சவுந்திர நாயகி தனிக் கோயிலில் வீற்றிருக்கிறார். இராஜ கணபதி, வள்ளி-தெய்வானையுடன் முருகன், ஹனுமன் ஆகியோருக்கு தனிச்சன்னதிகள் உள்ளன.

துர்கை, பிரம்மா, விஷ்ணு, தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.

பூதபுரீஸ்வரர் கோயில்
பூதபுரீஸ்வரர் கோயில்

இத்தலத்தின் மரம் மகிழ மரம். தீர்த்தம் பூதபுஷ்கரணி. இக்கோயிலில் பல கல்வெட்டுகள் காணக் கிடைக்கின்றன. இத்தலத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்தரத்தில் திருக்கல்யாண உற்சவமும் தேர்த் திருவிழாவும் நடக்கிறது.

இத்திருக்கோயில் மிகவும் அமைதியான இடத்தில் உள்ளது. மரங்கள் சூழ்ந்து காணப்படுகிறது. சிறிய கோயில் தான் கட்டட கலை வியக்க வைக்கிறது.

கோயில் பிரகாரத்தில் அழகழகான பூச்செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. மற்ற சிவாலயங்களைப் போல வழக்கமான நேரத்தில் திறந்திருக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்