சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு - பக்தர்களுக்கு அனுமதி!
Sabarimala Ayyappa Temple: பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ளது ஐயப்பன் கோயில். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த விழாக் காலங்களில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து தினமும் லட்சக்கணக்கா பக்தர்கள் குவிந்து ஐயப்பனை தரிசிப்பார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்
இவை தவிர ஒவ்வொரு தமிழ் மாதம் மற்றும் மலையாள மாத தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை (மார்ச் 14) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்தினார்.
தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு சபரிமலை மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி கோயில் கருவறையைத் திறந்து தீபம் ஏற்றினார். அதைத்தொடர்ந்து தந்திரி ராஜீவரு அபிஷேகம் நடத்தி, நெய்யபிஷேகத்தை துவக்கி வைத்தார்.
அதன்பின்னர், கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. மார்ச் 19-ந் தேதி வரை தினமும் அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது.
மார்ச் 19 தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். பின்னர் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி சபரிமலை கோயில் நடை மாா்ச் 26-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். தொடர்ந்து, மாா்ச் 27-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு கொடியேற்றப்பட்டு, ஏப்ரல் 5-ஆம் தேதி பங்குனி உத்திரம் ஆராட்டு நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாக அலுவலர் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். sabarimalaonline.org என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என்று திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது.