Saraswati puja 2022 : ஞானத்தை அள்ளித்தரும் சரஸ்வதி பூஜை!
சரஸ்வதி பூஜையின் வழிபாட்டு முறை மற்றும் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
நவராத்திரி பண்டிகையான ஒன்பது நாட்களும் கோயில்கள் வீடுகள் எனப் பாரபட்சம் இல்லாமல் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பார்வதி, சரஸ்வதி, லட்சுமி ஆகிய மூன்று தேதிகளுக்கும் மூன்று நாட்களாகப் பிரிக்கப்பட்டு ஒன்பது நாட்கள் நவராத்திரி கொண்டாடப்படுகிறது.
இந்த ஒன்பது நாட்களில் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்காக ஒதுக்கப்பட்டு பூஜைகளுடன் வழிபாடு செய்யப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பதாவது நாளான கடைசி நாள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
குறிப்பாகச் சரஸ்வதி குடி கொண்டிருக்கும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. கல்விக்கு அரசியான கலைவாணி, நாவிற்கரசி, கல்விக்கரசி எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் சரஸ்வதி தேவியின் சிறப்புகள் குறித்து இங்கே காண்போம்.
வீணையின் மகிமை
பிரம்மனின் மனைவி இந்த சரஸ்வதி தேவி. அறிவுக்களஞ்சியமான கல்வியை அள்ளித் தருபவர் இந்த சரஸ்வதி. சரஸ்வதி தேவி கையில் வைத்திருக்கும் வீணையின் பெயர் கச்சபி ஆகும். இந்த வீணையானது சிவபெருமானால் உருவாக்கப்பட்டது. பின்னர் நாரதர் உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் இசை நுணுக்கங்களை உபதேசித்த பிறகுத் தனது சகோதரி சரஸ்வதிக்கு இந்த வீணை வழங்கப்பட்டது என்பது அதிகமாகக் கூறப்படுகிறது.
சரஸ்வதி பூஜை வழிபாடு
கல்வியின் அதிபதியான சரஸ்வதி தேவியைப் பூஜை செய்து வழிபாடு செய்யும் சிறப்பான நாளில் சரஸ்வதி பூஜையாகக் கொண்டாடப்படுகிறது. நம்மைத் தொழிலில் முன்னேற்றம் அடையச் செய்யும் பொருட்களுக்கு மரியாதை கொடுத்து வழிபாடு செய்யும் நாளாக ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில் வேதாரண்யம் வீணையில்லாத சரஸ்வதி, மதுரை மீனாட்சி, கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை பொருவுடையார் பெரிய கோயில், காஞ்சிபுரம், கண்டியூர், உத்திரமேரூர், நாகூர் உள்ளிட்ட பல கோயில்களில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
பூஜை நாள்
நவராத்திரியில் வரும் மூல நட்சத்திர நாளில் இந்த சரஸ்வதி பூஜையைத் தொடங்க வேண்டும். சரஸ்வதி விக்கிரகங்கள் அல்லது படங்களில் ஆவாஹனம் செய்ய வேண்டும். கல்வியில் சிறந்து விளங்க நம் பயிலும் புத்தகங்களை அடுக்கி வைத்து அதன் மேல் சரஸ்வதி விக்கிரகத்தையோ அல்லது படத்தையோ வைத்து வழிபாடு செய்ய வேண்டும்.
படையல்
சரஸ்வதி தேவிக்கு ஆவாகனம் செய்து புத்தகங்களை வைத்து விட்டால் நான்கு நாட்கள் கழித்து அவிட்ட நட்சத்திரத்தன்று எடுக்க வேண்டும். தமிழகத்தில் சரஸ்வதி பூஜை அன்று நோட்டுப் புத்தகங்களை வைத்து வழிபாடு செய்து விட்டு மறுநாள் விஜயதசமி நாளில் எடுத்துப் படிக்கத் தொடங்குகின்றனர்.
சரஸ்வதி தேவிக்குத் தாமரை, ரோஜா, தாழம்பூ உள்ளிட்ட மலர்களால் பூஜை செய்து வழிபடலாம். மேலும் பழங்களில் பேரிச்சை, திராட்சை, நாவல், நைவேத்தியமாக அக்கார வடிசல், எலுமிச்சை சாதம், பால் சாதம், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றைச் சமர்ப்பிக்கலாம்.
வழிபட நல்ல நேரம்
சரஸ்வதி பூஜையான அக்டோபர் நான்காம் தேதி அன்று காலை 10.40 மணி முதல் 11.10 மணி வரை வழிபாடு செய்யலாம். மேலும் பிற்பகல் 12.10 மணி முதல் 1.10 மணி வரை பூஜை மேற்கொள்ளலாம். அக்டோபர் ஐந்தாம் தேதி விஜயதசமி திருநாள் கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி பூஜையன்று வழிபாடு செய்தவர்கள் மறுநாள் கொண்டாடப்படும் விஜயதசமி அன்று காலை 5 மணி முதல் 6 மணி வரை வழிபாடு செய்ய நல்ல நேரம் ஆகும். அதே போல் காலை 9.10 மணி முதல் 10.10 மணி வரை நல்ல நேரம் ஆகும். இந்த நேரங்களில் பூஜை செய்து வழிபாடு செய்தால் கல்வி, ஞானம், வாழ்வில் உயர்வு போன்ற நற்பலன்கள் கிடைக்கும்.
டாபிக்ஸ்