தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Mythological Story: அசுரபலம், ஆயிரம் யானை பலம் கொண்ட ராமாயண கதாபாத்திரம்!

Mythological Story: அசுரபலம், ஆயிரம் யானை பலம் கொண்ட ராமாயண கதாபாத்திரம்!

Manigandan K T HT Tamil
Nov 20, 2023 06:50 AM IST

"எல்லா முயற்சிகளும் வெற்றி பெறுவதில்லை, தோல்வியில் முடியும் முயற்சிகள், சில நேரங்களில், பெரியதொரு இழப்பில் போய் முடியும்" என்பது உண்மையானது.

துந்துபியின் கதை
துந்துபியின் கதை (Freepik)

பலவகை மனிதர்கள், பல மன ஓட்டங்கள், அவர்தம் ஆத்ம சித்தரிப்புகள், அவர் வாழ்வின் அம்சங்களை உள்ளடக்கி, புதுப்புதுச் சிந்தனைகளைத் தோற்று வித்து, என்றும் அழியாத காவியமாய்-கதையாய்- வரலாறாய், பட்டி தொட்டி எங்கும் பரிணமித்து, மிளிர்ந்து, இன்றளவும் கேட்டும், பார்த்தும் சலிக்காத ஓர் அற்புத காவியப் படைப்பு நம் இராமாயணம். 

பலப்பல இராமாயணங்கள் இருக்கின்றன.கதைகளும் வேறு வேறாக உள்ளன. இக்காவியத்தில் பெரிய , ஒரு நல்ல, திருப்பத்தை ஏற்படுத்தி விட்ட, ஒரு பாத்திரத்தின், பரிணாமத்தை இப்பதிவில் காண்போம்.

துந்துபி-அசுரர்களின் சிற்பி மயன் என்பவரின் மகனாவார். கடின தவம் பலவும் செய்து,பல வரங்களைப் பெற்றவர். பெற்ற வரங்களை என்ன செய்வது எனத் தெரியாது, புரியாது,மனம் போன போக்கில், எருமை மாடு வடிவில் சுற்றித் திரிந்தான்.

 அசுரபலம், ஆயிரம் யானை பலத்துடன் திரிந்த அவனைக் கண்டு அனைவரும் விலகி ஓடினர்.

"உலக வாழ்க்கை என்பது ஒரு தேர்வுக் களம், தேர்வுக்கு ,எப்படி தயார் ஆகிறோம் என்பதைப் பொறுத்தே பலனும் அமையும். மனோ இச்சைகளால் சூழப்பட்டு,வீணான சவால்களும்,வரட்டு தைரியங்களும் எதற்கும் பயன்படாது. தோல்வி தொடர்ந்து வந்தே அவனை அழித்தொழித்து விடும்" இதைப் புரிந்து கொள்ளவில்லை துந்தபி.

தனக்குள்ள பலம் காரணம் கர்வமும், மமதையும், தலைக் கனமும் கொண்டவனாய்த் திரிந்த அவன்,ஒரு நாள், சமுத்திர ராஜனை வலுசண்டைக்கு அழைத்தான். ஆனால் சமுத்திர ராஜனுக்கு இவன் கொட்டம் அடங்கப் போகிறது என்பது புரிந்து, "உனது பலம்,வீரத்திற்கு, என்னால் ஈடு கொடுக்க இயலாது,நீ ஒரு மாவீரன் " எனக்கூறி அவனை வடக்கே ஹிமாவானிடம் சண்டை செய்ய சொல்லி அனுப்பி வைத்தான்.

"பள்ளம் எனத் தெரிய வைப்பது விதி!

அதில் போய் விழாதே

என எச்சரிப்பது மதி!

விதியின் வாசல் மூடப்பட்டால், மதி அதில் மோதிக்கொண்டு, வேதனை அடையும்"

என்பதே இயற்கை.

துந்துபி,இப்போது, ஹிமாவானிடம் வலிய சென்று சண்டைக்கு அழைக்க,அவரோ "ஐயனே,எனக்கு போரில் பயிற்சி இல்லை,சண்டை போடத் திராணியும் இல்லை,நான் தற்போது, ரிஷிகளுடன் காலம் கழிக்கிறேன். உலக வாழ்வினை விளை நிலமாகப் பயன்படுத்தி, அதன் பலனை அறமாக அறுவடை செய்ய முயலுகின்றேன், உனக்கு சமமாய் யுத்தம் செய்ய, தெற்கில் ஒருவன் உண்டு, அவன் பெயர் வாலி" என்று விபரம் சொல்ல, துந்துபி, புறப்பட்டு வந்து வாலியின் கோட்டை வாசல் முன்பு நின்று கர்ஜித்தான்.

"வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும் துணை வலியும் தூக்கிச் செயல்" என்கிறார் வள்ளுவர். 

ஒரு செயலை, செயல்படுத்தும் முன், தாம் எடுக்கும் செயலின் வலிமை, நிறைவேற்றும் வலிமை, எதிர்ப்பவர் வலிமை, தமக்கும், அவர்க்குமுள்ள துணை வலிமை ஆகிய நான்கையும் மிக ஆராய்ந்து செய்ய வேண்டும் என்பது பொருள். 

இதை எதையும் கருத்தில் கொள்ளாமல், கத்திக் கொண்டிருந்த துந்துபியை சினத்துடன் பார்த்தவாறு, வெளி வந்த வாலி, அவனைப் பார்த்து 

"டேய் துந்துபி, நீ பலசாலி என்பதை நான் அறிவேன், ஆனால், ஏன் இங்கு வந்து கூச்சல் போட்டு, வீணாக ஆர்ப்பாட்டம் செய்கிறாய், உனது பலத்தைப் பரிசோதிக்க உகந்த இடம் அல்ல இது" எனக் கூறி அனுப்ப நினைத்தான்.

"விதி வலியது-அது

பிடர் பிடித்து உந்தும்"

என்பதற்கேற்ப, வாலியின் அறிவுரை எதுவும் துந்துபி காதில் ஏறவில்லை. அவன் வாலியை கோழை என்றுஎன்றும் பலவாறாக கேவல மாக தூஷித்துப் பேசினான்‌.

"எல்லா முயற்சிகளும் வெற்றி பெறுவதில்லை, தோல்வியில் முடியும் முயற்சிகள், சில நேரங்களில், பெரியதொரு இழப்பில் போய் முடியும்" என்பது உண்மையானது.

கோபத்துடன் வெளியில் வந்த வாலி "மூடனே,அறிவு இல்லாதவனே, உனக்கு சொன்னால் புரியாது" என கூறிக் கொண்டே, எருமை வடிவிலிருந்த துந்துபியின் கொம்புகளைப் பற்றி இழுத்து, சுழற்றி வீசி எறிய, பலசாலிகள் என்பவர்க்குள் திருமால் பலத்தையும் வழங்குகிறார்,

"ஸத்வம் ஸத்வதாம் அஹம்" என்பதால்தான்,விஷ்ணு

"மஹாபல" எனவும் வணங்கப்

படுகிறார்.

துந்துபி முதல் முறையாக பயந்தான்.

ஆனாலும் மீண்டெழுந்து, சண்டை தொடர,இறுதியில் வாலி,துந்துபியை உயரத் தூக்கிய அடித்து,உயிரற்ற உடலை, வீசி எறிந்தான்‌.

"உடைத்தும் வலி அறியார் பக்கத்தின் ஊக்கி

கடைக்கண் புரிந்தார் பலர்"

என்பார் வள்ளுவர்,தமது ஆற்றலின் அளவை அறியாமலோர் ஊக்கத்தில்

கிளர்ந்தெழுந்து,அதில் துன்பமடைந்தவர் பலர்.

இப்படித்தான் ஆயிற்று துந்துபியின் வாழ்க்கை.

வீசி எறிந்த துந்துபியின் உடல் விழுந்த இடம், புகழ்பெற்ற ரிச்ய முக பர்வத மதங்க முனிவரின் ஆசிரமம்‌. துந்துபியின் இரத்த துளிகள் தனது புனித ஆசிரமத்தில் கண்ட முனிவர் சினம் கொண்டு

"இவ்வாறு வீசி எறிந்தவன் இப்பூமியில் கால் வைக்கக் கூடாது, அப்படி வைத்தால் அப்போதே அவனுக்கு மரணம் சம்பவிக்கும்" என சாபமிட, வாலிக்கு அங்கே போகவே முடியாமல் ஆயிற்று. வாலிக்கு பயந்து வாழ்ந்திருந்த சுக்ரீவன், இங்கு, தனது ஜாகையை மாற்றிக் கொண்டான்‌‌.

பல வகையிலும் இந்த இடமானது முக்கியத்துவம் வாய்ந்தது. சுக்ரீவனின் படைத் தளபதியாக அனுமன் இருந்தது இங்குதான். ராம, லக்ஷ்மண், சுக்ரீவ, அனுமன் சந்தித்துப் பரஸ்பரம் மனம் விட்டுப் பேசிய இடமிது. வாலி வதம் நடக்க திட்டம் உருவானது இங்குதான். துந்துபியின் பெரிய எலும்புக் கூட்டைத் தன் கட்டை விரலால் நெம்பி, தூரத்தில் போய் விழச் செய்த, லக்ஷ்மணன் ஆற்றல் வெளிப்பட்டதும் இங்குதான். இங்கு வரும் போதுதான் சபரி மாதாவை சந்தித்தது. மாதங்க முனிவரின் பூர்ண ஆசி பெற்றதும் இங்குதான்‌.

இப்படி பலப்பல முக்கிய விஷயங்களுக்கும் காரணமாக இருந்த இடம் இந்த ரிச்ய முகப் பர்வதம்.

-கி.சுப்பிரமணியன்,

ஆன்மிக எழுத்தாளர்,

அடையார்,சென்னை.