மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா ஒடுக்கு பூஜை - குவியும் பக்தர்கள்
Mandaikadu Bhagavathi Amman Temple: மண்டக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி திருவிழா இறுதி நாள் பூஜையான ஒடுக்கு பூஜை இன்று நடைபெற இருப்பதால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற கோயிலாக பகவதி அம்மன் கோயில் உள்ளது. பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் இங்கு ஆண்டுதோறும் மாசி மாதம் கொடை திருவிழா நடைபெற்று வருகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்
இதையடுத்து இந்த ஆண்டுக்கான விழா கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் வரை நடைபெறும் இந்த விழாவில் கணபதி ஹோமம், உஷா பூஜை, அத்தால பூஜை, வலியை படுக்கை பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதல், சந்தனகுடம் ஊர்வலம், பால்குடம் ஊர்வலம் என நடைபெற்று முடிந்துள்ளன.
இதையடுத்து திருவிழாவின் 9ஆம் நாள் இரவில் மிகவும் பிரசித்தி பெற்ற பெரிய சக்கர தீ வெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இந்த நிகழ்வை காண பிற மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
இதைத்தொடர்ந்து விழாவின் 10ஆம் நாளான இன்று ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது. இந்த பூஜையில் சுமார் 20க்கும் மேற்பட்ட உணவு வகைகள் விரதம் இருந்தவர்களால் தயார் செய்யப்பட்டு படையல் வைக்கப்படும்.
விழாவின் முக்கிய நாளான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என்பதால் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏராளமான போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.